உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயிலில் ஒடிசா தம்பதியின் குழந்தையை கடத்தியவர் கைது

ரயிலில் ஒடிசா தம்பதியின் குழந்தையை கடத்தியவர் கைது

பாலக்காடு: கேரளாவுக்கு, ரயிலில் வந்த ஒடிசா தம்பதியின் குழந்தையை கடத்திய தமிழக நபர் கைது செய்யப்பட்டார்.ஒடிசாவைச் சேர்ந்த மனாஸ், ஹமிஷா தம்பதி, ஒரு வயது பெண் குழந்தையுடன், தாங்கள் வேலை செய்யும் கேரளாவின் அலுவா நகருக்கு டாடா நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன்தினம் பயணித்தனர். அவர்கள் பயணித்த பெட்டியில் ஒரு சிலர் மட்டுமே அமர்ந்திருந்தனர். அப்போது தங்கள் குழந்தையை அருகே படுக்க வைத்துவிட்டு, இருவரும் அயர்ந்து துாங்கினர். ரயில் திருச்சூர் வந்தபோது கண்விழித்த அவர்கள், குழந்தையை காணாமல் அதிர்ச்சியடைந்தனர். ரயில் முழுதும் தேடியும் குழந்தை கிடைக்காததால் திருச்சூர் ரயில்வே போலீசில் குழந்தையின் புகைப்படத்தைக் காட்டி புகார் அளித்தனர்.இதற்கிடையே பாலக்காட்டின் ஒலவக்கோடு பகுதியில் ரயிலில் இருந்து இறங்கிய ஒருவரது கையில் இருந்த குழந்தை அழுதபடி இருந்ததால் அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் சந்தேகம்அடைந்து, அவரிடம் விசாரித்தனர். அப்போது அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவரையும் குழந்தையையும் பாலக்காடு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தையை அவர் கடத்திச் செல்வதும், தமிழகத்தின் திண்டுக்கல்லைச் சேர்ந்த வெற்றிவேல் எனவும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். குழந்தையை, பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ