பெங்களூரு : கர்நாடகாவில், சேர்ந்து வாழ்ந்த பெண்ணை கொன்று, சடலத்தை குப்பை லாரியில் வீசிய அசாமை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.கர்நாடக மாநிலம், பெங்களூரு, சி.கே.அச்சுக்கட்டு போலீஸ் நிலையத்தில் இருந்து, 400 மீட்டர் துாரத்தில், 'ஸ்கேட்டிங்' மைதானம் உள்ளது. இந்த மைதானத்தின் முன், மாநகராட்சி குப்பை லாரி நிறுத்தப்பட்டிருக்கும்.நேற்று முன்தினம் அதிகாலையில், லாரியை எடுக்க வந்த ஓட்டுநர், லாரிக்குள் மூட்டை இருப்பதை கவனித்தார். பிரித்து பார்த்தபோது, ஒரு பெண்ணின் சடலம் இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், சி.கே.அச்சுக்கட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.சுற்றுப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், ஆட்டோவில் வந்த நபர், மூட்டையை லாரியில் போடுவது தெரியவந்தது. அந்த நபரை கைது செய்தனர்.இதுகுறித்து பெங்களூரு தெற்கு பிரிவு போலீஸ் துணை கமிஷனர் லோகேஷ் கூறியதாவது:
விசாரணையில் அப்பெண் பெயர் ஆஷா, 30, என்பது தெரியவந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், அவரது கணவர் இறந்து விட்டார். தன் குழந்தைகளுடன் ஆஷா வசித்து வந்தார்.தனியார் நிறுவனம் ஒன்றில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்த ஆஷாவுக்கும், அதே நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றிய அசாமை சேர்ந்த சம்சுதீன், 33, இடையே பழக்கம் ஏற்பட்டது. சம்சுதீனும் ஏற்கனவே திருமணமானவர். மனைவியும், இரு குழந்தைகளும் அசாமில் வசித்து வருகின்றனர்.ஆஷாவும், சம்சுதீனும் கணவன் - மனைவி என கூறி, ஹூலிமாவு பகுதியில் வீடு எடுத்து வசித்தனர். சமீபகாலமாக இருவரிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு உள்ளது.நேற்று முன்தினம் நடந்த சண்டையில் கோபமடைந்த சம்சுதீன், ஆஷாவின் கழுத்தை நெரித்து கொன்று, ஆட்டோவில் வந்து உடலை லாரியில் வீசியதை ஒப்புக் கொண்டார். அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.