மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டவர் கைது
புதுடில்லி:மெடிக்கல் ஸ்டோரில் பணம் கொள்ளையடிக்க முயன்ற நபர், உரிமையாளர் மீது துப்பாக்கியால் சுட்டு தப்பினார். அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.டில்லி துவாரகா பகுதியில் உள்ள மோகன் கார்டன் என்ற இடத்தை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ், 22. சில நாட்களுக்கு முன், துவாரகா பகுதியில் உள்ள ஆங்கில மருந்துக்கடை ஒன்றில் அவர் நுழைந்து, அதன் உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டு தப்பினார்.அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் படி, அந்த நபரை சுற்றி வளைத்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர்.போலீசார் கூறியதாவது:சம்பவம் நடந்த அன்று, ஓம் பிரகாஷ் என்ற இந்த நபர், திருடப்பட்ட ஸ்கூட்டர் ஒன்றில், துவாரகா பகுதியில் உள்ள அந்த மெடிக்கல் ஸ்டோருக்கு சென்று, அங்கிருந்த உரிமையாளரிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.அவர் தர மறுக்கவே, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு அங்கிருந்து தப்பினார். இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.கைதாகியுள்ள அந்த நபர் மீது எந்த குற்றமும் இதற்கு முன் பதிவாகவில்லை என்பதால், அவர் எதற்காக மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டி, துப்பாக்கியால் சுட்டார் என விசாரிக்கிறோம்.இவ்வாறு போலீசார் கூறினர்.