ரூ.2,500 கோடி போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டவர் கைது
புதுடில்லி: தலைநகர் டில்லியில், 2024 நவம்பரில், 82 கிலோ எடையிலான கோகைனை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்தனர். இவற்றின் சர்வதேச மதிப்பு 2,500 கோடி ரூபாய். இது தொடர்பாக ஐந்து பேரை கைது செய்து விசாரித்ததில், பவன் தாக்குர் என்பவர், கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. அவர், தன் குடும்பத்தினருடன், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய்க்கு தப்பிச் சென்றதும், போதைப்பொருள் கடத்தலில் சம்பாதித்த பணத்தின் மூலம், துபாயில் பல சொத்துக்களை அவர் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர, 'கிரிப்டோ' எனப்படும் மெய்நிகர் முதலீடு மற்றும் ஹவாலா பண மோசடியிலும் அவர் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக தனியாக வழக்குப் பதிந்து விசாரிக்கும் அமலாக்கத் துறை, பவன் தாக்குருக்கு பலமுறை சம்மன் அனுப்பியது. அவர் ஆஜராகாத நிலையில், ஜாமினில் வெளிவர முடியாத வாரன்டை டில்லி நீதிமன்றம் பிறப்பித்தது. துபாயில் தலைமறைவாகி உள்ள பவன் தாக்குரை நம் நாட்டிற்கு நாடு கடத்த, 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் உதவியை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு நாடியது. இதையடுத்து அவருக்கு எதிராக, 'தேடப்படும் நபர்' என்ற நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், துபாயில் பதுங்கி இருந்த பவன் தாக்குரை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். அவரை நம் நாட்டுக்கு நாடு கடத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் அவர், டில்லிக்கு அழைத்து வரப்படுவார் என கூறப்படுகிறது.