உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மன்மோகன் சிங் இறுதி சடங்குகள் இன்று!: முழு அரசு மரியாதையுடன் நடக்கும் தொடர்ந்து குவியும் இரங்கல்கள்

மன்மோகன் சிங் இறுதி சடங்குகள் இன்று!: முழு அரசு மரியாதையுடன் நடக்கும் தொடர்ந்து குவியும் இரங்கல்கள்

புதுடில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய அமைச்சரவை, முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. அவருடைய இறுதிச்சடங்குகள், டில்லியில் இன்று காலையில் நடக்க உள்ளன.காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 92, உடல்நலக்குறைவு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், நேற்று முன்தினம் இரவு காலமானார். நாட்டின் பொருளாதார சிற்பியான மன்மோகன் சிங், நிதியமைச்சராக 1990களில் கொண்டு வந்த தாராளமயமாக்கலே, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.எதிர்பாராமல் பிரதமரானவர், அதிகம் பேசாதவர், தன் அமைச்சர்களின் ஊழல்களை கண்டும் காணாமல் இருந்தவர் என, பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், தனிப்பட்ட முறையில், எவ்வித அப்பழுக்கும் இல்லாத, பல தலைமுறைகளில் நாம் காணாத அபூர்வமான அரசியல் தலைவராக அவர் விளங்கினார்.பெரிய மக்கள் தலைவராக, செல்வாக்கு மிக்க தலைவராக இல்லாதபோதும், அவருடைய மறைவுக்கு நாடு முழுதும் மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு, டில்லியில் உள்ள மன்மோகன் சிங் வீட்டுக்குச் சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா, மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின் என, பலரும் அஞ்சலி செலுத்தினர்.கட்சி பேதமில்லாமல் பல தலைவர்களும், மன்மோகன் சிங்குக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது.இதில், மறைந்த தலைவருக்கு, இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், மத்திய அரசின் சார்பிலும், நாட்டு மக்களின் சார்பிலும் அவருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.'அவருடைய மறைவால், நம் நாடு மிகச்சிறந்த பொருளாதார மேதையை, உயர் குணங்கள் உள்ள தலைவரை இழந்துள்ளது. அவர் நம் நாட்டு மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்' என, தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஏழு நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும். இந்த நாட்களில், தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். வெளிநாடுகளில் உள்ள துாதரகங்களிலும், நம் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், அமைப்புகளுக்கு அரைநாள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் வளர்ச்சிக்கு சிறந்த பங்காற்றிய மறைந்த தலைவருக்கு, முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.டில்லியின் மோதிலால் நேரு தெருவில் உள்ள அரசு பங்களாவில், மன்மோகன் சிங் உடல் நேற்று வைக்கப்பட்டிருந்தது. பல தலைவர்களும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.அவருடைய உடல், காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு இன்று காலை 8:00 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கட்சியினர் மரியாதை செலுத்துவதற்கு வைக்கப்படும் என, கட்சியின் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி புகழஞ்சலி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு, இரங்கல் தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது:வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெறுவது சாதாரண விஷயம் அல்ல. பிரிவினையின்போது இந்தியாவுக்கு வந்த மன்மோகன் சிங் நிறைய இழந்திருந்தாலும், தன் வாழ்க்கையில் அவர் காலடி வைத்த ஒவ்வொன்றிலும் வெற்றி பெற்ற சாதனையாளர்.துன்பங்களைத் தாண்டி உச்சங்களை எவ்வாறு அடைவது என்பதை அவருடைய வாழ்க்கை, எதிர்கால சந்ததியினருக்கு கற்றுக் கொடுக்கிறது.மிகவும் கனிவான மனிதர், கற்றறிந்த பொருளாதார நிபுணர் மற்றும் சீர்திருத்தங்களுக்கு அர்ப்பணித்துக் கொண்ட தலைவராக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். ஒரு பொருளாதார நிபுணராக பல்வேறு நிலைகளில் நாட்டுக்கு அவர் எண்ணற்ற பங்களிப்புகளை அளித்துள்ளார். மிகவும் சவாலான காலங்களில் ரிசர்வ் வங்கியின் கவர்னராக அவர் ஆற்றிய பணிகள் சிறப்புமிக்கவை.பின்னர் நிதியமைச்சரான மன்மோகன் சிங், நாட்டை நிதி நெருக்கடியிலிருந்து மீட்டு புதிய பொருளாதாரப் பாதையில் வழிநடத்தினார். பிரதமராக நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அவருடைய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். மக்கள் மீதும், நாட்டின் வளர்ச்சி மீதும் அவர் கொண்ட உறுதிப்பாடு எப்போதும் உயர்ந்த மதிப்புடையது.புகழ்பெற்ற சர்வதேச நிறுவனங்களில் கல்வி பயின்று, அரசின் உயர் பதவிகளை வகித்த போதும், தன் எளிமையான பின்னணியின் மதிப்புகளை மன்மோகன் சிங் ஒருபோதும் மறந்ததில்லை.கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவராகவும், அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களுடனும் தொடர்பை பேணுபவராகவும், அனைவரும் எளிதில் அணுகக் கூடியவராகவும் அவர் விளங்கினார்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை