13 ஆண்டுகளுக்கு பின் மாரம்மா கோவில் திறப்பு
மைசூரு: தலித் சமுதாயத்தினர் கோவிலில் நுழைய அனுமதி மறுத்து, 13 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த கோவில், தாசில்தார் முயற்சியால் திறக்கப்பட்டது. நேற்று முதல் பூஜைகள் நடைபெற்றன.மைசூரு நகர் ஜெயபுராவின், மார்பள்ளி கிராமத்தில் பழமையான மாரம்மா கோவில் உள்ளது. இந்த கோவிலில் தலித் சமுதாயத்தினர் நுழைந்ததால், வால்மீகி நாயக் சமுதாயத்தினர் ஆட்சேபம் தெரிவித்தனர். இரண்டு சமுதாயத்தினருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதால், 13 ஆண்டுகளாக கோவில் மூடப்பட்டிருந்தது.இதற்கு தீர்வு காணும் நோக்கில், மைசூரு தாலுகா தாசில்தார் மகேஷ்குமார், மாவட்ட எஸ்.பி., விஷ்ணுவர்த்தன் அலுவலகத்தில், நேற்று முன் தினம் இரண்டு சமுதாயத்தினருடன், சமாதான பேச்சு நடத்தினார். இதில் வருவாய்த்துறை, சமூக நலத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.அதில் பேசிய மகேஷ்குமார், 'கோவிலுக்குள் செல்வது, அனைவரின் உரிமையாகும். கிராமத்தில் அமைதியை கடைபிடிக்க வேண்டும். அனைத்து சமுதாயத்தினரும் கோவிலுக்கு செல்ல வாய்ப்பளிக்க வேண்டும்' என அறிவுரை கூறினார்.இதை இரண்டு சமுதாயத்தினரும் ஏற்றுக்கொண்டனர். அதன்பின் கோவில் நடைதிறக்கப்பட்டது. இரண்டு சமுதாயத்தினரும் உள்ளே சென்று அம்மனை வழிபட்டனர். நேற்று முதல் பூஜை, புனஸ்காரங்கள் துவங்கின.