கேரள உயர்நீதிமன்ற தலையீட்டால் சபரிமலையில் நனவாகிறது மாஸ்டர் பிளான்
சபரிமலை:கேரள உயர்நீதிமன்றத்தின் தலையீடு காரணமாக 18 ஆண்டுகளுக்கு பின்னர் 317 கோடி ரூபாய் செலவிலான மாஸ்டர் பிளான் திட்டம் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் கிடைக்கும்.சபரிமலை வரும் பக்தர்களின் வசதிக்காக 2006 - ல் மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டது. பம்பை ஹில்டாப் - கணபதி கோயில் பாலம் 32 கோடி, மாளிகைப்புரத்திலிருந்து சந்திராங்கதன் ரோடுக்கு பக்தர்கள் திரும்பிச் செல்ல பாலம் 40 கோடி, புதிய பிரசாத மண்டபம், தந்திரி, மேல் சாந்தி மடங்கள், கோயில் திருமுற்றம் அபிவிருத்தி 96 கோடி, நிலக்கல் பார்க்கிங் கிரவுண்டில் பக்தர்கள் தங்கும் மையம். குடிநீர் வசதி 145 கோடி, சன்னிதானம் அன்னதான மண்டபம், பக்தர்கள் தங்கும் கட்டடங்களில் தீயணைப்பு வசதி ஏற்படுத்தல் 4 கோடி இப்படி பல்வேறு திட்டங்கள் இந்த பிளானில் இடம்பெற்றிருந்தது.2007 - ல் இந்தத் திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் வழங்கியது. இதை செயல்படுத்த 2009ல் கேரள உயர் நீதிமன்ற மேற்பார்வையில் உயர் அதிகார கமிட்டி அமைக்கப்பட்டது.ஆனால் தேவசம்போர்டு மற்றும் வனத்துறை இடையிலான நில பிரச்னை காரணமாக செயல்படுத்துவதில் தடங்கல் ஏற்பட்டது. இதையடுத்து வழக்கறிஞர் கமிஷனை நியமித்து நிலத்தை அளக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை, வனத்துறை. தேவசம்போர்டு இணைந்து அளவீடு செய்து எல்லைக்கல் நடப்பட்டதால் நிலம் சம்பந்தமான பிரச்னை முடிவுக்கு வந்தது.இதைத்தொடர்ந்து 18 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த சபரிமலை மாஸ்டர் பிளான் திட்டம் இந்த சீசனுக்கு பிறகு தொடங்கும் என்று தேவசம்போர்டு கூறியுள்ளது.