மருத்துவ மாணவர் உதவித்தொகை முறைகேடு பா.ஜ., - எம்.எல்.சி.,க்கு நிபந்தனை முன்ஜாமின்
பெங்களூரு: மருத்துவ மாணவர்களின் உதவித்தொகையை, தன் தனிப்பட்ட செலவுக்கு பயன்படுத்தியதாக, பா.ஜ., - எம்.எல்.சி., சசில் நமோஷி மீது தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமின் வழங்கி, கர்நாடாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கலபுரகியில், ஹைதராபாத் - கர்நாடகா கல்வி மையத்துக்கு உட்பட்ட மஹாதேவப்பா ராம்போர் மருத்துவ கல்லுாரி உள்ளது. இம்மையத்தின் உறுப்பினர் பிரதீப் தாபாசெட்டி, 'சென்' போலீசில் புகார் அளித்தார்.அதில், 'மஹாதேவப்பா ராம்போர் மருத்துவ கல்லுாரியில் படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை, சில மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. சில மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதில், மையத்தில் உறுப்பினராக உள்ள பா.ஜ., - எம்.எல்.சி., சசில் நமோஷி உட்பட மற்றவர்களுக்கு தொடர்பு உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.இதையறிந்த சசில் நமோஷி, தான் கைது செய்யப்படலாம் என்று கருதி, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்திருந்தார்.இம்மனு, நீதிபதி நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, 'புகாரில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக, பத்து ஆண்டோ அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் எந்த குற்றமும் இல்லை. முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் தொகை பெரியது என்றாலும், அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க மட்டுமே வாய்ப்பு உள்ளது.'குற்றம் சாட்டப்பட்டவர், மக்கள் பிரதிநிதியாக உள்ளதால், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவருக்கு முன் ஜாமின் வழங்கப்படுகிறது. அத்துடன, அவர், 2 லட்சம் ரூபாய்க்கான தனிப்பட்ட பாண்டு, அதே அளவில் உத்தரவாத தொகையும் செலுத்த வேண்டும்.'விசாரணை அதிகாரி அழைக்கும் போது ஆஜராக வேண்டும். அவர் கேட்கும் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறினால், முன்ஜாமின் ரத்து செய்யப்படும்' என்றார்.