புதுடில்லி: 'வருவாயை அதிகரிப்பதற்காக, 'வாட்ஸாப்' செயலியில் இனி விளம்பரங்கள் இடம்பெறும். எனினும், பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும்' என, 'மெட்டா' நிறுவனம் அறிவித்துள்ளது.அமெரிக்காவின் பிரையன் ஆக்டன், ஜான் கோம் ஆகியோர் இணைந்து, கடந்த 2009ல் வாட்ஸாப் எனும் தகவல் பரிமாற்ற செயலியை உருவாக்கினர். உலகம் முழுதும், கோடிக்கணக்கான பேர் பயன்படுத்தும் இச்செயலியை, 'பேஸ்புக்'கின் தாய் நிறுவனமான, 'மெட்டா' கடந்த 2014ல் வாங்கியது. 'யு டியூப், எக்ஸ், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக வலைதளங்கள் தங்கள் தளங்களில் விளம்பரங்களை புகுத்தினாலும், 'வாட்ஸாப்' செயலியில் விளம்பரங்கள் இன்றி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், 'மெட்டா' நிறுவனம், வருவாயை அதிகரிக்கும் நோக்கில், 'வாட்ஸாப்' செயலியில் விளம்பரங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து, 'மெட்டா' வெளியிட்ட அறிக்கை:'வாட்ஸாப்' செயலியில் விளம்பரங்கள் மற்றும் புதிய, 'பெய்டு சப்ஸ்கிரிப்ஷன்' அறிமுகப்படுத்தப்பட உள்ளது. உலகம் முழுதும் உள்ள பயனர்களுக்கும் இந்த புதிய நடைமுறை பொருந்தும். எனினும், 'வாட்ஸாப்'பின், 'அப்டேட்ஸ்' பகுதியில் மட்டுமே விளம்பரங்கள் இடம்பெறும். 'மெசேஜிங்', அழைப்புகள்,'குரூப் சாட்டிங்' செய்யும் பகுதிகளில் விளம்பரங்கள் இடம்பெறாது. பயனர்களின் தனிப்பட்ட தகவல்களும் வழக்கம்போல் பாதுகாக்கப்படும். அவர்களின் தனிப்பட்ட தகவல்கள், விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்படாது.தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மக்களிடம் எடுத்துச்செல்லும் வகையில் இந்த விளம்பரங்கள் உதவும். பயனர்களின் வயது, வசிப்பிடம், மொழி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் விளம்பரங்கள் அமையும்.இவ்வாறு இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.'இந்த புதிய அம்சங்கள், அடுத்த சில மாதங்களில் படிப்படியாக இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும்' என, எதிர்பார்க்கப்படுகிறது.