மெட்ரோ ரயில் கட்டணம் உயர்வு இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பெங்களூரு: பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்துவது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகிறது.சமீபத்தில் அரசு போக்குவரத்து கழகங்களின் பஸ் கட்டணம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அடுத்து, மெட்ரோ ரயில் கட்டணமும் விரைவில் உயர்த்தப்பட உள்ளது. இது தொடர்பான பேச்சு, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.பெங்களூரு மெட்ரோ நிறுவன அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில், கட்டண உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புள்ளது.பெங்களூரு மெட்ரோ நிறுவன தகவல் தொடர்பு அதிகாரி யஷ்வந்த் சவுஹான் கூறியதாவது:மெட்ரோ ரயில் கட்டண உயர்வு குறித்து, சாந்தி நகரில் உள்ள நம்ம மெட்ரோ தலைமை அலுவலகத்தில், நேற்று ஆலோசனை நடந்தது. கட்டண உயர்வுக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கட்டண உயர்வு பற்றி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.எவ்வளவு தொகை உயர்த்தப்படும்; எப்போது முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும்; ஒரு ஸ்டேஜில் இருந்து மற்றொரு ஸ்டேஜிக்கு எவ்வளவு உயர்த்தப்படும் என்பது குறித்து, நாளை (இன்று) விவரிக்கப்படும். 105 சதவீதம் கட்டணத்தை உயர்த்தும்படி, மெட்ரோ நிறுவனம் வேண்டுகோள் விடுத்தது. 40 முதல் 45 சதவீதம் வரை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படும் வாய்ப்புள்ளது.கடந்த ஏழு ஆண்டுகளாக, மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. எனவே கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டோம். இதற்காக கமிட்டி அமைக்கப்பட்டது. கமிட்டியும் 2024 அக்டோபர் 3 முதல் 28 வரை பயணியரிடம் கருத்துகளை கேட்டறிந்தது. டிசம்பர் இறுதியில் உயர் அதிகாரிகளிடம் அறிக்கை அளித்தது. இதன் அடிப்படையில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.