சாலையில் துாசியை அகற்ற நவீன இயந்திரம்
புதுடில்லி: தலைநகர் டில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக, சாலைகளில் உருவாகும் தூசியை அப்புறப்படுத்த நவீனரக இயந்திரங்களை முதல்வர் ரேகா குப்தா நேற்று தொடங்கி வைத்தார். டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் முக்கியப் பிரச்னையாக இருக்கும் காற்று மாசை கட்டுப்படுத்த, அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்டை மாநிலங்களில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் டில்லிக்குள் நுழையவும், கட்டுமானம் மற்றும் கட்டடங்களை இடிக்கும் பணிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகர் முழுதும் லாரிகள் மூலம் தண்ணீர் தெளித்தும், துாசி கட்டுப்படுத்தப்படுகிறது. இந்நிலையில், சாலைகளில் உருவாகும் துாசியை அப்புறப்படுத்த, 19 நவீனரக தானியங்கி இயந்திரங்களை, டில்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று தொடங்கி வைத்தார். டில்லியில் மொத்தம், 70 இயந்திரங்கள் சாலையில் துாசியை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அவற்றில், 55 வாகனங்கள் மின்சாரத்தில் இயங்குகின்றன. 15 இயந்திரங்கள் சி.என்.ஜி.,யில் இயங்குகின்றன. இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து, 923.57 கோடி ருபாய் செலவில் இந்த இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. டில்லி மாநகராட்சி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மேயர் பிரவேஷ் வாஹி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா, லோக்சபா பா.ஜ., – எம்.பி., பிரவின் கந்தெல்வால், துணை மேயர் மோனிகா பந்த், நிலைக்குழு தலைவர் சத்யா சர்மா, மாநகராட்சி சபை தலைவர் ஜெய் பகவான் யாதவ், மாநகராட்சி ஆணையர் சஞ்சீவ் கிர்வார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வானிலை
டில்லியில் அதிகாலை வேளைகளில் கடுங்குளிரும், மூடுபனியும் நிலவுகிறது. வெப்பநிலை இன்று (நவ.,27) 9.3 டிகிரி செல்ஷியஸாக பதிவாகி இருந்தது. . காற்றின் சராசரி தரக் குறியீடு இன்று 221ஆக பதிவாகி இருந்தது. இது, மோசமான நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.