குரங்கம்மை தாக்கம்; உறுதி செய்தது கேரளா; ஒருவருக்கு தீவிர சிகிச்சை!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மலப்புரம்: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவின் மலப்புரம் மாவட்டத்திற்கு திரும்பிய நபருக்கு குரங்கம்மை இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.ஆப்ரிக்க நாடுகளில், 'எம் - பாக்ஸ்' எனப்படும் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்து, உலகளவில் அந்த தொற்றை பொது சுகாதார அவசரநிலையாக, உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது. காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகுவலி, தசைவலி போன்றவை இதன் அறிகுறிகள்.நம் அண்டை நாடுகளான பாக்., மற்றும் வங்கதேசத்தில் குரங்கம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியது.சர்வதேச பயணியர் உட்பட வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ஹரியானாவின் ஹிசார் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞருக்கு, கடந்த வாரம் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது இவர் டில்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவின் மலப்புரம் திரும்பிய 38 வயதான நபருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில், அந்த நபர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டது உறுதியானது. மலப்புரம் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். மேலும் அவர், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் குரங்கம்மை அறிகுறி தென்பட்டால், சுகாதார அமைப்பினருக்கு தகவல் தெரிவித்து சிகிச்சை பெறும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.