வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு குரங்கு அம்மை?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ஆப்ரிக்க நாடுகளில் கடந்த ஆண்டு ஜனவரி முதல், 'மங்கி பாக்ஸ்' எனப்படும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்த நோய்க்கு 1,100 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அளவிலான சுகாதார அவசர நிலையை அறிவித்தது. இந்நிலையில், குரங்கு அம்மை பாதிப்பு இருந்த நாட்டுக்கு சென்று, சமீபத்தில் இந்தியா திரும்பிய நபருக்கு அந்நோய் தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.இதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய சுகாதார அமைச்சக அறிக்கை: குரங்கு அம்மை அறிகுறிகளுடன் வந்தவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர் நலமுடன் உள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மக்களின் பாதுகாப்புக்காக அரசு இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. குரங்கு அம்மை அறிகுறியுடன் வந்தவர் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.