உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாருதி கார்களுக்கான மாதாந்திர தவணை இனி... ரூ.1,999 மட்டுமே!

மாருதி கார்களுக்கான மாதாந்திர தவணை இனி... ரூ.1,999 மட்டுமே!

புதுடில்லி : ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்களால் கார்களின் விலை அதிரடியாக குறைந்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க கவர்ச்சிகரமான, இ.எம்.ஐ., எனப்படும் மாத தவணை திட்டத்தை, பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான 'மாருதி சுசூகி' அறிவித்துள்ளது. அதன்படி மாதத்துக்கு, 1,999 ரூபாய் தவணை செலுத்தி சாமானியர்கள் காரை சொந்தமாக்கிக் கொள்ளலாம்.ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்த பல அடுக்குகள் நீக்கப்பட்டு, 5 மற்றும் 18 சதவீத அடுக்குகள் மட்டுமே தொடரும் என, சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. மேலும், புகையிலை பொருட்கள், ஆடம்பர கார்களுக்கு மட்டும், 40 சதவீத ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆர்வம்

திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி., கடந்த 22 முதல் நாடு முழுதும் அமலுக்கு வந்தது. இதனால், அத்தி யாவசிய பொருட்கள் முதல் இருசக்கர வாகனங்கள், கார்கள் வரை விலை குறைந்துள்ளன. இதனால், அவற்றை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, நவராத்திரி பண்டிகை துவங்கிய முதல் நான்கு நாட்களில் மட்டும், 80,000 கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்ட முதல் நாளில் மட்டும், அந்நிறுவனம் ஒரே நாளில், 25,000 கார்களை டெலிவரி செய்து, தன், 35 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளது. ஜி.எஸ்.டி., குறைப்பு மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில், பல கவர்ச்சிகரமான சலுகைகளையும் மாருதி சுசூகி நிறுவனம் அளித்துள்ளது. அதன்படி, சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற நடுத்தர மக்களின் கனவை நிஜமாக்கும் வகையில், 1,999 ரூபாய் மாத தவணை திட்டத்தை அந்நிறுவனம் அறிவித்துஉள்ளது. இத்திட்டத்தின் கீழ், மாதத்துக்கு 1,999 ரூபாய் தவணை செலுத்தி, சாமானியர்கள் காரை சொந்தமாக்கிக் கொள்ளலாம். இது குறித்து, மாருதி சுசூகி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை துறையின் மூத்த நிர்வாக அதிகாரி பார்த்தோ பானர்ஜி நேற்று கூறியதாவது:நவராத்திரி துவங்கிய முதல் நான்கு நாட்களில் மட்டும், 80,000 கார்களை விற்பனை செய்துள்ளோம்.

வரவேற்பு

கடனளிக்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் கடன்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் அளிக்கின்றன. கடந்த சில நாட்களாக, நாங்கள் 'பிஸி'யாக உள்ளோம். இதற்கு ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் தான் காரணம். முன்பு, ஒரு நாளைக்கு 10,000 ஆக இருந்த முன்பதிவு, தற்போது, 18,000 என்ற அளவில் அதிகரித்து உள்ளது. சிறிய கார்களுக்கு கூட நல்ல வரவேற்பு உள்ளது. ஒட்டுமொத்தத்தில் முன்பதிவு இரு மடங்கு அதிகரித்துள்ளது. சிறிய கார்களில், 100 சதவீத விற்பனை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது, பெரிய நகரங்களில் 35- - 40 சதவீதமாக உள்ளது. சாமானியர்களும் கார் வாங்குவதை எளிதாக்க, ஒரு பயனுள்ள மாத தவணை திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம்.

எளிதாகிவிடும்

இதன்படி, வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு, 1,999 ரூபாய் தவணை செலுத்தி காரை சொந்தமாக்கி கொள்ளலாம். இதன் மூலம், இருசக்கர வாகன உரிமையாளர்கள், நான்கு சக்கர வாகனங்களை வாங்குவது இனி எளிதாகி விடும்.இவ்வாறு அவர் பேசினார்.இதற்கிடையே, உலகளவில் அதிக சந்தை மதிப்பு கொண்ட வாகன தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலில், இந்தியாவின் மாருதி சுசூகி எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் அமெரிக்காவின், 'டெஸ்லா' நிறுவனம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை