கள்ளக்காதலன் இறந்த அதிர்ச்சியில் 2 பிள்ளைகளின் தாய் தற்கொலை
சம்பிகேஹள்ளி: கள்ளக்காதலன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில், இரண்டு பிள்ளைகளின் தாயும் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.பெங்களூரு ரூரல் தேவனஹள்ளி அருகே விஜயபுராவைச் சேர்ந்தவர் தில்ஷாத், 23. இவருக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணா, 27, என்பவருடன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். பெங்களூரு நகரின் சம்பிகேஹள்ளி அருகே ராச்சேனஹள்ளியில் வசித்தனர்.இந்நிலையில் தில்ஷாத்துக்கும், தனிசந்திராவின் ஜான்சன், 25, என்பவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் மொபைல் போனில் பேசினர். பின், காதலிக்க துவங்கினர்.'நம் காதலை இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளாது' என, தில்ஷாத்திடம், ஜான்சன் அடிக்கடி கூறி வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, ஜான்சன் தன் வீட்டில் திடீரென துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தில்ஷாத்துக்கு முதலில் தெரியவில்லை.ஜான்சன் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து, அவரது புகைப்படத்தை, நண்பர்கள் சிலர் முகநுாலில் பதிவிட்டு இருந்தனர். அந்த பதிவை பார்த்தபோது தான், ஜான்சன் இறந்தது தில்ஷாத்துக்கு தெரிய வந்தது.நேற்று காலையில் ஜான்சன் வீட்டிற்குச் சென்று, அவரது உடலை பார்த்து தில்ஷாத் கதறி அழுதார். பின், வீட்டிற்கு சென்று அவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவங்கள் குறித்து ஹென்னுார், சம்பிகேஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.