முடா முறைகேடு வழக்கு: சித்தராமையாவுக்கு சம்மன்
மைசூரு; 'முடா' எனும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையத்தில் விதிமீறலாக வீட்டுமனைகள் பெற்ற வழக்கு தொடர்பாக, நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி, முதல்வர் சித்தராமையாவுக்கு, மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.'முடா'விடம் இருந்து முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி, சட்டவிரோதமாக 14 மனைகள் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, சமூக ஆர்வலர் சினேஹமயி கிருஷ்ணா, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதற்கு கவர்னர் தாவர்சந்திடம் அனுமதி பெற்றிருந்தார்.அதன் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி, மைசூரின் லோக் ஆயுக்தா போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, இவரது சகோதரர் மல்லிகார்ஜுன சாமி, நிலத்தின் உரிமையாளர் தேவராஜ் ஆகியோர் மீது, லோக் ஆயுக்தாவினர் வழக்குப் பதிவு செய்தனர்.ஏற்கனவே பார்வதி, மல்லிகார்ஜுன சாமி, தேவராஜ் ஆகியோரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது. தீபாவளி முடிந்த பின், முதல்வர் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தாவினர் நோட்டீஸ் அளித்து, விசாரணைக்கு அழைக்கக்கூடும் என, எதிர்பார்க்கப்பட்டது.அதே போன்று, பண்டிகை முடிந்த கையோடு, லோக் ஆயுக்தாவினர், நாளை (6ம் தேதி) விசாரணைக்கு ஆஜராகும்படி, முதல்வர் சித்தராமையாவுக்கு, நேற்று மாலை சம்மன் அனுப்பியுள்ளனர்.முதல்வர் சித்தராமையா, 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார். இதுவரை அவர் எந்த வழக்கிலும், குற்றவாளியாக விசாரணையை எதிர்கொண்டது இல்லை. இப்போதே முதன் முறையாக, லோக் ஆயுக்தா முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.விசாரணைக்கு ஆஜராவதாக, முதல்வர் கூறியுள்ளார்.