மும்பை: மஹாராஷ் டிராவில், சிவசேனா கட்சியை துவக்கி அதிரடி அரசியல் நடத்தியவர், பால் தாக்கரே. இவரது மறைவிற்கு பின், மகன் உத்தவ் தாக்கரே கட்சி தலைவர் ஆனார். பால் தாக்கரேயின் தம்பி மகன் ராஜ் தாக்கரே, மஹாராஷ்டிரா நவ்நிர்மாண் சேனா என்ற பெயரில் புதுக்கட்சியை ஆரம்பித்தார். எதிரும் புதிருமாகவே இருவரும் செயல்பட்டு வந்தனர். ஆனால், மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட உள்ளதாக உத்தவ் - ராஜ் ஆகியோர் அறிவித்துள்ளனர்.'இப்படி திடீர் ஒற் றுமைக்கு குடும்பம் காரணமா?' என்று கேட்டால், 'இல்லவே இல்லை' என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். சமீபத்தில், மஹாராஷ்டிராவில் நடந்த நகராட்சி, பஞ்சாயத்து தேர்தலில், பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்றது; உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் கட்சி படுதோல்வியை சந்தித்தது. ராஜ் தாக்கரேயின் கட்சிக்கும் இதே நிலை தான். காங்., தனித்து போட்டியிட்டு தோல்வி அடைந்தது.ஒரு காலத்தில் மும்பை மாநகராட்சியில் சிவசேனா தொடர்ந்து ஆட்சி நடத்தியது. 'இப்படியே போனால் நம் நிலைமை அதோ கதி தான் என்பதை தாக்கரே சகோதரர்கள் உணர்ந்துள்ளதால், இப்போது கூட்டணி அமைத்துள்ளனர்' என்கின்றனர் கட்சி தலைவர்கள்.தனித்தனியாக போட்டியிட்டால், அவர்களின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும் என்பதாலேயே இருவரும் கூட்டணி அமைத்துள்ளனர். ஏற்கனவே, மஹாராஷ்டிரா பள்ளிகளில் ஹிந்தி மொழி கட்டாயம் என, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் அறிவித்த போது, தாக்கரே சகோதரர்கள் இணைந்து போராடினர். உடனே இந்த திட்டத்தை அரசு கைவிட்டது. மும்பை மாநகராட்சி தேர்தலில் காங்., தனித்து போட்டியிடுகிறது.'நகராட்சி, பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றது போல, இதிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்' என்கிறார், முதல்வர் பட்னவிஸ். ஏன் இந்த தேர்தலுக்கு மட்டும் இப்படி அனைத்து கட்சிகளும் அடித்துக் கொள்கின்றன என்றால், 'பி.எம்.சி.,' என அழைக்கப்படும், மும்பை பெருநகர மாநகராட்சி பட்ஜெட், 74,427 கோடி ரூபாய். எத்தனையோ 'டெண்டர்'கள், கட்சிக்கு பணம் சேர்க்கும் வழிகள் இங்கு அதிகம். அதனால் தான் அனைத்து அரசியல் கட்சிகளும், இந்த தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன.இந்த மாநகராட்சிக்கு, 2022 முதல் தேர்தல் நடக்கவில்லை. மேயர், துணை மேயர் பதவிகள் காலியாக உள்ளன. அரசு அதிகாரிகள் தான் நிர்வாகம் செய்கின்றனர். வரும் ஜன., 15ல் தேர்தல் நடக்கிறது.