சட்டவிரோத இறைச்சிக்கடைக்கு மாநகராட்சி ரூ.37 ஆயிரம் அபராதம் அதிகாரிகளை தாக்கிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., மீது வழக்கு
நரேலா:சட்டவிரோத இறைச்சிக் கூடத்தில் சோதனை செய்த எம்.சி.டி., எனும் டில்லி மாநகராட்சி அதிகாரிகளை தாக்கியதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.ஷஹபாத் பால் பண்ணை பகுதியில் சட்டவிரோத இறைச்சிக் கூடங்கள் இருப்பதாக மாநகராட்சிக்கு புகார்கள் சென்றன. அவற்றின் அடிப்படையில் அந்தப் பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.நரேலா மண்டலத்தின் சுனில்குமார் ரங்கா தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர். அப்போது ஒரு இறைச்சிக்கடையில் சட்டவிரோதமாக 15 ஆடுகளை வெட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.இதற்காக ஒரு ஆட்டுக்கு 2,500 வீதம் 37,500 ரூபாய் அபராதம் செலுத்தும்படி அந்த கடையின் உரிமையாளர் குல் முகமதுவை மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.அத்துடன் தன்னிடம் பணிபுரியும் தொழிலாளிகளுடன் சேர்ந்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., ஜெய் பகவான் உப்கார், முன்னாள் கவுன்சிலர் ஷரத்தானன் உள்ளிட்டோர் வந்தனர்.இறைச்சிக்கடைக்காரருக்கு ஆதரவாக அவர்கள் பேசினர். மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநகராட்சி அதிகாரி சுனில்குமார் ரங்காவை எம்.எல்.ஏ., தாக்கியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து போலீசில் சுனில்குமார் ரங்கா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை துவக்கியுள்ளனர்.