மஹாராஷ்டிராவில் நகராட்சிகளுக்கு டிச., 2ல் தேர்தல்
மும்பை: மஹாராஷ்டிராவில் 246 நகராட்சிகள், 42 நகர பஞ்சாயத்துகளுக்கு வரும் டிசம்பர் 2ல் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் கமிஷனர் தினேஷ் வாஹ்மரே அறிவித்துள்ளார். மஹா.,வில் பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பை மாநில தேர்தல் கமிஷனர் தினேஷ் வாஹ்மரே நேற்று வெளியிட்டார். அவர் கூறியுள்ளதாவது: மாநிலத்தில் உள்ள 246 நகராட்சிகள், 42 நகர பஞ்சாயத்துகளுக்கான ஓட்டுப்பதிவு டிச., 2ல் நடத்தப்படும். இதற்கான ஓட்டு எண்ணிக்கை மறுநாள் நடத்தப்படும். இந்த தேர்தலில் மின்னணு இயந்திரத்தை பயன்படுத்தி ஓட்டுப்பதிவு நடத்தப் படும். தேர்தலில், 1.7 கோடி பேர் ஒட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். இதற்காக, மாநிலம் முழுதும் 13,355 ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் நவ., 17. மறுநாள் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனு வாபஸ் பெற நவ., 21 கடைசி நாள். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கிடையே நாட்டின் மிகப்பெரும் பணக்கார மாநகராட்சியான மும்பை உட்பட 29 மாநகராட்சிகள், 32 ஜில்லா பரிஷத்கள், 336 பஞ்சாயத்து சமிதி ஆகியவற்றுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.