மைசூரு தசரா துவக்க விழா: நாகராஜய்யாவுக்கு அழைப்பு
பெங்களூரு: மைசூரு தசரா விழாவை துவக்கி வைக்கும்படி, இலக்கியவாதி நாகராஜய்யா உட்பட முக்கிய பிரமுகர்களுக்கு, விழா குழுவினர் முறைப்படி அழைப்பு விடுத்தனர்.உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா, அக்., 3 முதல் 12ம் தேதி வரை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.ஆண்டுதோறும் சமூகத்துக்கு சேவை செய்த முக்கிய பிரமுகர் மூலம், விழா துவக்கி வைக்கப்படும். அந்த வகையில், இந்தாண்டு கன்னட இலக்கியவாதி நாகராஜய்யா துவக்கி வைப்பதாக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அழைப்பிதழ்
இந்நிலையில், பெங்களூரு கிரசென்ட் சாலையின் அமெரிக்கா காலனியில் உள்ள அவரது வீட்டிற்கு, மைசூரு மாவட்ட கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி, மைசூரு நகர போலீஸ் கமிஷனர் சீமா லாட்கர், சாமுண்டி மலை மேம்பாட்டு ஆணைய செயலர் ரூபா உட்பட உயர் அதிகாரிகள், நேற்று நாகராஜய்யா வீட்டிற்கு சென்றனர்.அவரை சந்தித்து, தசரா விழாவை துவக்கி வைக்கும்படி, அழைப்பு விடுத்தனர். அவருக்கு மைசூரு தலைப்பாகை, பட்டு சால்வை, ஏலக்காய் மாலை அணிவித்து கவுரவித்தனர். இதுபோன்று, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், சட்டசபை சபாநாயகர் காதர், மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சர் மஹாதேவப்பா, கன்னடம் மற்றும் கலாசார துறை துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி ஆகியோருக்கும், தசரா விழா குழு சார்பில், முறைப்படி அழைப்பிதழ் வழங்கப்பட்டன. பீரங்கி பயிற்சி
விஜயதசமி அன்று நடக்கும் ஜம்பு சவாரி ஊர்வலம், மைசூரின் பன்னிமண்டபத்தில் நிறைவு பெறும்.அப்போது, போலீசாரின் தீப்பந்த அணிவகுப்பை, கவர்னர் துவக்கி வைத்து, 2024 தசரா விழாவை முறைப்படி முடித்து வைப்பார்.மைசூரு தசரா விழாவின் இறுதி நாளான விஜயதசமியன்று ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும். இதில், சாமுண்டீஸ்வரி தேவியை தங்க அம்பாரியை சுமந்து கஜபடை ஊர்வலமாக செல்லும்.அப்போது, சாமுண்டீஸ்வரி தேவிக்கு, முதல்வர் சித்தராமையா, மன்னர் வம்சத்தின் யதுவீர் உட்பட முக்கிய பிரமுகர்கள் மலர் துாவி துவக்கி வைப்பர். இந்த வேளையில், பாரம்பரிய முறைப்படி, ஏழு பீரங்கிகள் மூலம் மூன்று முறை 21 குண்டுகள் வெடிக்க செய்து, கவுரவம் அளிக்கப்படும்.அந்த வேளையில், ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகள், குதிரைகள் மிரளும் வாய்ப்பு உள்ளது. இதனால், யானைகள், குதிரைகளுக்கு வெடி சத்த பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம்.இந்த வகையில், மைசூரு அரண்மனை வளாகத்தில், பீரங்கிகள் மூலம் குண்டு வெடிக்க செய்யும் பயிற்சி நேற்று துவங்கப்பட்டது. அப்போது, தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு உட்பட 14 யானைகளும், குதிரைகளும் மிரளாமல் கம்பீராக இருந்தன. இதுபோன்று, வரும் 29, அக்., 1ம் தேதி என மேலும் இரண்டு முறை பீரங்கி வெடி சத்தம் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.