ஆங்கில புத்தாண்டு பாதுகாப்பு; மைசூரு போலீசார் ஏற்பாடு
மைசூரு; ''ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, தேவையான, கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,'' என, மைசூரு நகர போலீஸ் கமிஷனர் சீமா லட்கர் தெரிவித்தார்.மைசூரு நகரில் நேற்று காலை குற்றம் தடுப்பு மாத விழிப்புணர்வு ஊர்வலத்தை, நகர போலீஸ் கமிஷனர் சீமா லட்கர் துவக்கி வைத்தார். முன்னதாக, அவர் அளித்த பேட்டி:பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், டிச., 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை குற்றத்தடுப்பு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பள்ளி, கல்லுாரிகள், பூங்காக்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.பொதுமக்கள் பார்க்கும் சட்ட விரோத நடவடிக்கைகள், சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடவடிக்கையை, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொது மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே, குற்றச் சம்பவங்களை தடுக்க முடியும்.அதுபோன்று, சுற்றுலா செல்லும் குடும்பத்தினர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உங்கள் பகுதிக்கு உட்பட்ட போலீசில் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள நகரில் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.