உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுற்றுலா பயணியர் வருகையால் களை கட்டுகிறது மைசூரு தசரா

சுற்றுலா பயணியர் வருகையால் களை கட்டுகிறது மைசூரு தசரா

மைசூரு : சுற்றுலா பயணியர் அதிக அளவில் வருகையால், மைசூரு தசரா விழா களை கட்டியுள்ளது. எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளமாகவே காட்சி அளிக்கிறது.உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா, கடந்த 3ம் தேதி துவங்கியது. வரும் 12ம் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி, நகரின் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

படையெடுப்பு

கர்நாடகாவில் வரும் 20ம் தேதி வரை, பள்ளிகளுக்கு தசரா விடுமுறை என்பதால், மக்கள் பலரும் மைசூருக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். சிறார்கள் முதல் பெரியோர் வரை ரசிக்க கூடிய நிகழ்ச்சிகள் ஒரே நகரில் பார்ப்பது அரிது.உணவு பிரியர்களுக்கு உணவு திருவிழா; முதியோருக்கு நாடக உற்சவம்; இளைஞர்களுக்கு யுவ தசரா மற்றும் விளையாட்டு போட்டிகள்; சிறார்கள் ரசிக்கும் வகையில் பொருட் கண்காட்சியில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள்; அனைவருக்கும் ரசிக்கும் வகையில், மலர் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், திரைப்பட திருவிழா; இலக்கியவாதிகளுக்கு கவியரங்கம் என சொல்லி கொண்டே போகலாம்.போதாத குறைக்கு அருகில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவில், நாகரஹொளே, பண்டிப்பூர், மடிகேரி, கே.ஆர்.எஸ்., அணை என பல சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனால், தசரா விழாவில் ஆரம்பம் முதலே மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அனைத்து ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், சுற்றுலா பயணியரால் நிரம்பி வழிகின்றன.வாடகையும் சற்று உயர்ந்தே உள்ளது. எதையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆனந்தமாய் குடும்பத்தினருடன் மைசூரில் குவிந்து வருவதால், தசரா விழா களை கட்டி உள்ளது.

கச்சேரி

யுவ தசராவில் தினமும் ஒரு பிரபல பாடகரின் இசை கச்சேரி நடக்கிறது. அந்த வகையில், இன்று ஏ.ஆர்.ரகுமான், நாளை இளையராஜா ஆகியோரின் இசை கச்சேரி நடக்கிறது. டிக்கெட் கட்டணம் தலா 2,500 முதல் 8,000 ரூபாய் வரை இருந்தும், இசை பிரியர்கள் தாராளமாக வாங்கி உள்ளனர்.பிரபலமான குதிரை வண்டிகளில் அரண்மனையை சுற்றி வருவதும்; அம்பாரி டபுள் டெக்கர் பஸ்சில் நகர் வலம் வந்து மின் விளக்கு அலங்காரத்தை ரசிப்பதும் மனதிற்கு கூடுதல் சுகத்தை தருகிறது. இதனால், மைசூரு வியாபாரிகளுக்கும் நல்ல வருமானம் உள்ளது.தசரா நிறைவு நாளான விஜயதசமி அன்று, ஜம்பு சவாரி ஊர்வலம் நடப்பதால், அதற்கு முன்பே மைசூரு நகரம் சுற்றுலா பயணியரால் பரபரப்பாக காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளமாகவே காணப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை