மஹா கும்பமேளாவில் சித்ரதுர்காவின் நாகசாது பலி
சித்ரதுர்கா : மஹா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி, சித்ரதுர்காவை சேர்ந்த நாக சாது ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.சித்ரதுர்கா பஞ்சாரா குரு பீடத்தில் வசித்து வந்தார் ராஜ்நாத் மகாராஜ், 49. நாகசாதுவான இவர், கடந்த ஏழு ஆண்டுகளாக பீடத்தில் இருந்து வந்தார்.ஒரு வாரத்திற்கு முன்பு மஹா கும்பமேளாவிற்கு சென்றார். இவருடன் குரு பீடத்தின் தலைமை அதிகாரியான ஸ்ரீ சர்தாரும் சென்று இருந்தார். கும்ப மேளாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ராஜ்நாத் மகாராஜ் பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இவரது உடலை அடையாளம் கண்ட உத்தர பிரதேச போலீசார், கர்நாடகா போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.இதுகுறித்து லம்பானி குர்பீத் சர்தார் சேவலால் சுவாமிகள் கூறுகையில், ''எப்போதும் கும்பமேளா செல்வது குறித்தே ராஜ்நாத் பேசிக் கொண்டு இருப்பார். அவரது அஸ்தியை சித்ரதுர்காவுக்கு கொண்டு வர வேண்டும் என உத்தர பிரதேசம், கர்நாடகா அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். கூட்ட நெரிசலில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என கேட்டுக் கொண்டார்.