உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரீல் ரியலான சம்பவம்! புஷ்பாவை தியேட்டரில் பார்த்த பிரபல ரவுடியை அள்ளிய போலீஸ்

ரீல் ரியலான சம்பவம்! புஷ்பாவை தியேட்டரில் பார்த்த பிரபல ரவுடியை அள்ளிய போலீஸ்

நாக்பூர்: நாக்பூர் அருகே புஷ்பா படம் பார்த்துக் கொண்டிருந்த பிரபல ரவுடியை தியேட்டரில் வைத்தே போலீசார் கைது செய்துள்ளனர். நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி உள்ள புஷ்பா 2 படம் சக்கை போடு போடுகிறது. வசூலிலும் புதிய சாதனை படைத்து திரையுலகத்தை பிரமிக்க வைத்துள்ளது. இந்த படத்தை தியேட்டருக்கே சென்று பார்த்துக் கொண்டிருந்த பிரபல தாதாவை, அங்கேயே வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு; நாக்பூரைச் சேர்ந்தவர் விஷால் மேஷ்ரம். பிரபல ரவுடியான இவர் மீது 27 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் 2 கொலை வழக்குகள் அடக்கம். சரித்திர பதிவேடு குற்றவாளியான அவர் மீது போதை பொருள் கடத்தல் வழக்குகளும் உள்ளன. கடந்த 10 மாதங்களாக போலீசில் பிடியில் சிக்காமல் தப்பித்த வண்ணம் இருந்திருக்கிறார். எப்படியாவது விஷால் மேஷ்ரத்தை பிடித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிய நாக்பூர் போலீசார், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். சைபர் க்ரைம் மூலம் அவரது நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ளனர். அதற்கு கை மேல் பலன் கிடைத்திருக்கிறது. நாக்பூரில் உள்ள பிரபல தியேட்டர் ஒன்றில் செகண்ட் ஷோவாக, விஷால் மேஷ்ரம் ஹாயாக உட்கார்ந்து புஷ்பா 2 படம் பார்த்துக் கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பந்தப்பட்ட தியேட்டருக்கு போலீசார் பறந்தனர். அங்கு விஷால் மேஷ்ரம் இருப்பதை உறுதி செய்த போலீசார், உடனடியாக தியேட்டர் வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டு இருந்த அவரது சொகுசு காரை பஞ்சர் செய்தனர். பின்னர் நைசாக தியேட்டர் அரங்கில் நுழைந்த போலீசார், இருட்டில் படு சுவாரசியமாக புஷ்பா 2 படத்தை ரசித்துக் கொண்டிருந்த ரவுடி விஷால் மேஷ்ரத்தை அலேக்காக அள்ளிக் கொண்டு வெளியே வந்தனர். எந்த சந்தர்ப்பத்திலும் தியேட்டரில் இருந்த ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித தொந்தரவும் தராமல் ரவுடியை போலீசார் கைது செய்தனர். பிரபல டான் படமான புஷ்பாவை, பிரபல ரவுடி ஒருவர் தியேட்டரில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த போது, யாருக்கும் எந்த சிக்கலையும் தராமல் கைது செய்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை