உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலாற்றில் மாசு ஏற்படுத்துவோரை தண்டிக்கவில்லை எனில் இயற்கை உங்களை பழிவாங்கும்: கலெக்டர்களுக்கு செம டோஸ்

பாலாற்றில் மாசு ஏற்படுத்துவோரை தண்டிக்கவில்லை எனில் இயற்கை உங்களை பழிவாங்கும்: கலெக்டர்களுக்கு செம டோஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாலாறு மாசு விவகாரத்தில் யார் தவறு செய்தாலும், அவர்களை தண்டியுங்கள். நாங்கள் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தாதது, அதிர்ச்சி அளிக்கிறது. 'நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்தவில்லை என்றால், அந்த உத்தரவு காகிதத்தில் மட்டும் தான் இருக்கும்' என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் உள்ளிட்ட மாவட்டங்களின் வழியாக பாலாறு ஓடுகிறது. அதை சுற்றி இருக்கும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகள் பாலாற்றில் கலப்பதால், அந்த தொழிற்சாலைகளை மூட உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வேலுார் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்குழு சார்பில் மனு தாக்கல் செய்யப் பட்டிருந்தது. இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்த்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 30ம் தேதி இது தொடர்பாக விரிவான உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், 'பாலாற்றில் தோல் தொழிற்சாலைகளால் ஏற்பட்ட மாசு காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். 'ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நிபுணர் குழு அமைத்து, பாலாற்று பகுதியில் ஏற்படும் மாசுபாட்டை கண்காணிக்க வேண்டும். ஆறு மாசுபடுவதை தடுக்க, உரிய பரிந்துரைகளை வழங்க வேண்டும்' என தெரிவித்திருந்தது. கலெக்டர்கள் ஆஜர் இந்நிலையில், இந்த மனு நேற்று, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராணிப்பேட்டை, வேலுார் மற்றும் திருப்பத்துார் ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்கள் மற்றும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆஜராகினர். அவர்களிடம் நீதிபதிகள், 'பாலாற்றில் மாசுபாட்டை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?' என கேள்வி எழுப்பினர். அதற்கு, 'இத்தகைய தொழிற்சாலைகள் கழிவுநீர் கலப்பது தொடர்பான புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளிடம் அது தொடர்பாக விளக்கம் கேட்கப்படுகிறது. கழிவுநீர் கலப்பது உறுதி செய்யப்பட்டால், அத்தகைய தொழிற்சாலைகளை உடனடியாக மூட உத்தரவிடப்படுகிறது' என, அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, 'சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் எத்தனை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இருக்கின்றன?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வேலுார் கலெக்டர் சார்பில், தங்களது மாவட்டத்தில் ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் இத்தகைய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று கூட இல்லை என தெரிய வந்ததும், நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்த மாவட்டத்தில், 'ஒரு சுத்திகரிப்பு நிலையம் கூட இல்லாதது கவலை அளிக்கிறது. அப்படி என்றால், கழிவுநீர் அனைத்தும் அப்படியே நேரடியாக ஆற்றில் கலந்து விடப்படுகிறதா?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உங்களால் முடியாதா? இதன்பின், நீதிபதிகள் கூறியதாவது: இது போன்ற நடவடிக்கைகளை நிச்சயமாக ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஒரு மாவட்டத்தின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அதிகாரிகளாக இருந்து, இதை கூட உங்களால் இதுவரை செய்ய முடியவில்லையா? உங்களது வீடும், இந்த மாவட்டங்களில் தான் இருக்கிறது. உங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் இந்த ஆற்று நீரைத் தான் குடிநீருக்காக பயன்படுத்துகின்றனர். அது பற்றி உங்களுக்கு கவலை இல்லையா? ஆயிரக்கணக்கான லிட்டர் கழிவுநீர் இப்படி தொடர்ந்து ஆற்றில் விடப்பட்டு கொண்டே இருந்தால், அந்த ஆற்றின் நிலைமை என்னவாகும்? அதை குடிப்பவர்கள் நம் மக்கள் தானே; அவர்கள் பாவமில்லையா? ஜாக்கிரதை! எங்களின் நோக்கம், உங்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என்பது இல்லை. இயற்கையை நீங்கள் பாதுகாக்கவில்லை என்றால், அந்த இயற்கை நிச்சயம் உங்களை ஒரு நாள் பழி வாங்கிவிடும். அதனால், அந்த இயற்கையை பாதுகாக்க என்ன தேவையோ, அவை அனைத்தையும் செய்யுங்கள். ஆற்றில் மாசுபாட்டை ஏற்படுத்தும் ஒருவரையும் விட்டு விடாதீர்கள். யார் தவறு செய்தாலும், அவர்கள் அதிகாரமிக்கவர்களாக இருந்தாலும், அவர்களை விட்டு விடாதீர்கள். அவர்களை நீங்கள் தண்டிக்கவில்லை என்றால், இயற்கை உங்களை தண்டித்து விடும். பாலாறு விவகாரத்தில் நாங்கள் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. உத்தரவை முழுமையாக அமல்படுத்தவில்லை என்றால், அது காகிதத்தில் மட்டும் தான் இருக்கும். இந்த விஷயத்தில் அனைவரது கூட்டு முயற்சியும் தேவைப்படுகிறது. உதாரணமாக இருங்கள் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இதர அமைப்புகளுடன் இணைந்து வேலை பாருங்கள். இவற்றை தீர்க்க ஒரு கடினமான நடவடிக்கை எடுங்கள். நாட்டின் மற்ற மாநிலங்களுக்கு நீங்கள் உதாரணமாக இருங்கள். உங்களை எடுத்துக்காட்டாக கொண்டு, அவர்கள் தங்களது மாநிலங்களில் நதி நீரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கட்டும். எனவே, இந்த விவகாரத்தில் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதை அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள். இந்த விவகாரத்தில் மனுதாரர்கள் தெரிவிக்கக்கூடிய கருத்துகளும் மிகவும் முக்கியமானவை. எனவே, உங்களது யோசனைகளை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்கள் தெரிவிக்கும் யோசனையை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். இரண்டு வாரங்களுக்கு முதல் வழக்காக இந்த வழக்கை விசாரிக்கிறோம். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை