நக்சல் பாதிப்பு மாவட்டங்கள் 12லிருந்து 6 ஆக குறைந்தன
புதுடில்லி; ''மத்திய அரசின் தொடர் முயற்சிகளால், நாட்டின் நக்சல் தீவிரவாத பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் எண்ணிக்கை, 12லிருந்து ஆறாக குறைந்துள்ளன,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.'எக்ஸ்' சமூக வலைதளத்தில், மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி அரசு, நாட்டிலிருந்து நக்சல் தீவிரவாதத்தை வேருடன் அகற்ற முடிவு செய்து செயலாற்றி வருகிறது. நக்சல்கள் இல்லாத பாரத நாட்டை உருவாக்க திட்டமிட்டு செயலாற்றுகிறோம். அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் வரை, நாட்டின் நக்சல் பாதித்த மாவட்டங்களாக இருந்த, 12 மாவட்டங்கள் குறைந்து, ஆறாக மாறியுள்ளன. 2026 மார்ச் 31ம் தேதிக்குள், நாட்டில் இருந்து நக்சல் தீவிரவாதம் ஒழித்துக் கட்டப்படும். இதில், அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.நக்சல் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்கள் என, அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில், வளர்ச்சி திட்டங்களுக்காக அந்த மாவட்டங்களுக்கு, 10 - 30 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்படுகிறது.