நீமுச்: “நாட்டில் நான்கு மாவட்டங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள நக்சல் நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒழிக்கப்படும்; இந்தப் பணியில் முதுகெலும்பாக சி.ஆர்.பி.எப்., வீரர்கள் இருப்பர்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.கடந்த 1950 மார்ச் 19ம் தேதி, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபபாய் படேல், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவின் கொடியை படைக்கு வழங்கினார். இதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் மார்ச் 19ல் சி.ஆர்.பி.எப்., தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சி.ஆர்.பி.எப்., தினக் கொண்டாட்டங்கள், மேலும் சில மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மத்திய பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப்.,ன் 86வது எழுச்சி தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அமித் ஷா, சி.ஆர்.பி.எப்., வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்டு, உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டில் நான்கு மாவட்டங்களில் மட்டுமே நக்சலிசம் உள்ளது. அடுத்த ஆண்டு, மார்ச் 31க்குள், இந்த அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வரும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்த பணியில் சி.ஏ.பி.எப்., எனப்படும் மத்திய ஆயுதப் படையும், சி.ஆர்.பி.எப்., படையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, சி.ஆர்.பி.எப்., படையின் கோப்ரா பிரிவின் பெயரைக் கேட்டாலே நக்சல்கள் அலறி நடுங்குகின்றனர். சி.ஆர்.பி.எப்., வீரர்களின் திறமையான பணியால், நக்சல் பாதித்த பகுதிகளில் 70 சதவீதம் வன்முறை குறைந்துள்ளது. அதை முழுதும் கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளை எதிர்த்து போராடுவது, வடகிழக்கில் அமைதியை உறுதி செய்வது, நக்சலைட்டுகளை கட்டுப்படுத்துவது என எந்தப் பணியாக இருந்தாலும், தேசிய பாதுகாப்புக்கு சி.ஆர்.பி.எப்.,ன் பங்களிப்பு ஈடு இணையற்றது. இந்த சாதனைகள் அனைத்திலும், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அவர்களின் துணிச்சல், கடமை உணர்வு மற்றும் தைரியத்திற்கு எதுவும் ஈடாகாது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சல்கள் முழுமையாக ஒழிக்கப்படுவர். இதற்கு சி.ஆர்.பி.எப்., வீரர்கள் முதுகெலும்பாக உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், சி.ஆர்.பி.எப்., படையின் மூத்த அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
22 நக்சல்கள் கைது
சத்தீஸ்கரின் உசூர் அருகேயுள்ள டெக்மெல்லா கிராமம் அருகே வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய ரிசர்வ் போலீசின் கோப்ரா பிரிவினருடன் உள்ளூர் போலீசார் இணைந்து கடந்த 15ம் தேதி நடத்திய தேடுதல் வேட்டையில் ஏழு நக்சல்கள் கைது செய்யப்பட்டனர். இதுபோல் ஜங்க்லா அருகே பெல்சார் கிராமத்தின் கோட்டைகளில் பதுங்கியிருந்த ஆறு நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் நெலஷ்னார் அருகேயுள்ள கன்டகர்கா கிராமத்தின் வனப்பகுதியில் இருந்து ஒன்பது நக்சல்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு மூன்று இடங்களில் இருந்து, மொத்தம் 22 நக்சல்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் 19 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களிடம் இருந்து டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள், ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள், ஆயுதங்கள் மற்றும் மாவோயிஸ்ட் கொள்கை பரப்பும் துண்டு பிரசுரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.