உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தே.ஜ., கூட்டணி முதல்வர்கள் கூட்டம்: ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆலோசனை

தே.ஜ., கூட்டணி முதல்வர்கள் கூட்டம்: ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''விளிம்புநிலை மக்களையும், பின்தங்கியவர்களையும் வளர்ச்சி பாதையில் கொண்டு வருவதற்கான ஒரு அங்கமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு இருக்கும்,'' என பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் உட்பட 20 முதல்வர்கள், சிவசேனாவை சேர்ந்த மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஜனசேனா கட்சியை சேர்ந்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட 18 துணை முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பு, ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி, நக்சல் ஒழிப்பு, தே.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங்களின் மக்கள் நலத் திட்டங்கள் உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்பட்டன. மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துள்ள பிரதமர் மோடி அரசின், முதலாம் ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி, அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நக்சல் ஒழிப்புக்கான மத்திய அரசின் செயல் திட்டம் குறித்து, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில முதல்வர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கினார். ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான தீர்மானத்தை, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் கொண்டு வந்தனர். உ.பி., துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, ''ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது பா.ஜ.,வின் கொள்கைகளில் முக்கியமான அங்கம்,'' என குறிப்பிட்டார். இதில் பேசிய பிரதமர் மோடி, ''ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது, விளிம்பு நிலை மக்களையும், பின்தங்கிய பிரிவினரையும் வளர்ச்சிக்கான பிரதான பாதையில் கொண்டு வருவதற்கான ஒரு படி. அதுவே நம் அரசின் குறிக்கோள்,'' என்றார். ஜாதிவாரி கணக்கெடுப்பு, ஆப்பரேஷன் சிந்துார் வெற்றிக்கு நன்றி ஆகியவை இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நட்டா, ''பா.ஜ., அரசு மற்றும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகளுக்கு ஜாதி ரீதியான அரசியலில் நம்பிக்கை கிடையாது. ஆனால், பல்வேறு துறைகளிலும் பின்தங்கி இருக்கும் விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்துக்கு ஜாதி கணக்கெடுப்பு உதவும்,'' என்றார். 'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றிக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மஹா., துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, சர்ச்சைக்குரிய விஷயங்கள் எதையும் பொது வெளியில் பேச வேண்டாம் என அறிவுறுத்தினார். மேலும், போர் நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய விஷயங்களை பிரதமர் திட்டவட்டமாக மறுத்தார். போரை நிறுத்தும்படி பாகிஸ்தானிடமிருந்து தான் முதலில் அழைப்பு வந்தது என்பதையும், இந்த கூட்டத்தில் பிரதமர் உறுதியாக தெரிவித்தார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !