உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்க வரி விதிப்பால் பாதிப்பு; அவசர கால நிவாரணம் வழங்க ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தல்

அமெரிக்க வரி விதிப்பால் பாதிப்பு; அவசர கால நிவாரணம் வழங்க ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: 'ஆயத்த ஆடைஏற்றுமதி வர்த்தகத்தை பாதுகாக்க, அவசரகால நிவாரண உதவியை அறிவிக்க வேண்டும்' என, ஏ.இ.பி.சி., துணை தலைவர் சக்திவேல், மத்திய நிதி அமைச்சரிடம் வலியுறுத்தினார். அமெரிக்கா, இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தியதால், இந்திய ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு நிவாரண உதவி வழங்க வேண்டுமென, ஏ.இ.பி.சி., துணை தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் உட்பட தமிழக தொழில் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் இன்று (செவ்வாய்) நடந்த நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் துறையினரை சந்தித்தாார்.அதில், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) துணை தலைவர் சக்திவேல், நிதியமைச்சரிடம் அளித்த கடிதம்:பருத்தி இறக்குமதிக்கான, 11 சதவீத இறக்குமதி வரியை, டிச., 31 வரை ரத்து செய்தது, ஆடை ஏற்றுமதித் தொழிலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மத்திய அரசின் நேரடி உதவியால், பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலில் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றி கொள்ள முடியும். இந்திய ஆயத்த ஆடை உள்ளிட்ட ஜவுளி ஏற்றுமதியில், அமெரிக்கா முக்கிய இடத்தில் உள்ளது. கடந்த நிதியாண்டில், அந்நாட்டுக்கு மட்டும், ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி, 95,000 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. ஆயத்த ஆடை மட்டும், 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதியாகியுள்ளது.திருப்பூர், நொய்டா, குருகிராம், பெங்களூரு, லூதியானா மற்றும் ஜெய்ப்பூர் கிளஸ்டர்கள், அமெரிக்க ஆர்டர்களை பெரிதும் சார்ந்துள்ளன. லட்சக்கணக்கான வேலை வாய்ப்பும் கிடைத்து வருகிறது. இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில், அமெரிக்கா தவிர்க்க முடியாத முக்கிய இடத்தில் இருக்கிறது. அமெரிக்கா, தங்கள் நாட்டின் இறக்குமதி ஆடைகளுக்கான, பரஸ்பரம் 25 சதவீத வரியை காட்டிலும், கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்துள்ளது. இதனால், ஆடைகளுக்கான மொத்த வரிவிதிப்பு, 70 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்த அபரிமிதமான வரி உயர்வு, இந்திய ஏற்றுமதியாளரின் போட்டித்திறனை பாதித்துள்ளது. குறிப்பாக, வங்கதேசம், வியட்நாம் நாடுகளுக்கான வரி குறைக்கப்பட்டு, இந்தியாவுக்கான வரி உயர்த்தப்பட்டதால், வர்த்தக இழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. அமெரிக்க வரி உயர்வால், இதுவரை இல்லாத அளவுக்கு நெருக்கடியைச் சந்தித்து வருகிறோம். ஆயத்த ஆடைஏற்றுமதி வர்த்தகத்தை பாதுகாக்க, அவசரகால நிவாரண உதவியை அறிவிக்க வேண்டும்.

'போகஸ் மார்க்கெட்'

அமெரிக்க சந்தைகளுக்கான ஆடை ஏற்றுமதியை பாதுகாக்க, 'போகஸ் மார்க்கெட்' திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். இதன் வாயிலாக, ஏற்றுமதியாகும் ஆடைகளுக்கு, 20 சதவீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். இத்தகைய சலுகையால், அமெரிக்க ஏற்றுமதி பாதிப்பை சமாளித்து, வர்த்கத்தை தக்கவைக்க முடியும். ஏற்றுமதி வர்த்தகத்தை பாதுகாக்க, வட்டி சமன்படுத்தும் திட்டத்தை புதிய வடிவில், ஐந்தாண்டுகளுக்கு செயல்படுத்த வேண்டும். வட்டி மானியத்துக்கான உச்சவரம்பு விதிமுறைகளை தளர்த்தி, வட்டி சமன்படுத்தும் திட்ட சலுகையை, 5 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும்.

வங்கிக்கடன் சலுகை

ஏற்றுமதி தொடர்பான அனைத்து கடன்களுக்கும். அசல் தொகையை திருப்பி செலுத்த, இரண்டு ஆண்டு வரை அவகாசம் வழங்க வேண்டும் அல்லது அமெரிக்க வரி உயர்வு பிரச்னை தீரும் வரை நீட்டிக்கலாம். ஏற்றுமதியாளர்களின் வங்கி கணக்கை, செயல்படாத கணக்காக அறிவிக்கும் காலஅவகாசம், 90 நாட்கள் என்பதை, 180 நாட்களாக நீட்டிக்க வேண்டும். ஒட்டுமொத்த ஜவுளித்தொழிலுக்கும், ஆடை ஏற்றுமதிக்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்க, மத்திய அரசு, விரைவான நிவாரண உதவியை வழங்க முன்வர வேண்டும்.

அமெரிக்க பருத்தி நுாலிழை ஆடை

அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும், பருத்தி பஞ்சில் உற்பத்தியான ஆடைகளுக்கு, பரஸ்பரம் வரி விலக்கு சலுகை வழங்க, அமெரிக்காவிடம் கோரிக்கை வைக்க வேண்டும். பரஸ்பரம் வரி சலுகை வழங்க வேண்டும்; இல்லாதபட்சத்தில், 20 சதவீதம் வரியை தள்ளுபடி செய்ய வலியுறுத்த வேண்டும். ஆடை உற்பத்தியில், அமெரிக்க பருத்தி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பருத்தி மற்றும் மூலப்பொருட்களில் உற்பத்தியான ஆடைகளை, மீண்டும் அமெரிக்கா ஏற்றுமதி செய்ய, முழுமையான வரிவிலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு, சக்திவேல் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கண்காணிக்கிறது

அமெரிக்க வரிவிதிப்பால் தொழில்துறையில் ஏற்படும் பாதிப்புகளை, மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தொழிற்சாலைகளுக்கும், தொழில் அமைப்புகளுக்கும், தேவையான வழிகாட்டுதல் மற்றும் திட்டங்களை மத்திய அரசு வழங்கும். நாட்டில் உள்ள அனைத்து தொழில்களும் பாதிப்பின்றி செயல்படுவதை உறுதி செய்ய, தொடர்புடைய அமைச்சகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். - நிர்மலா சீதாராமன் மத்திய நிதி அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தாமரை மலர்கிறது
செப் 03, 2025 01:35

எந்த பாதிப்பும் திருப்பூருக்கு இல்லை. இன்னும் இரண்டு மாதத்தில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் நிறைவேறும். அதற்குள் அவசரகால நிவாரணம் கொடுக்க தேவை இல்லை. அனாவசியமாக அரசு பணத்தை கடன் வாங்கி, கம்பெனிகளுக்கு கொடுத்தால்,பணவீக்கம் தான் ஏற்படும். தமிழகம் பதினோரு சாத்தவிதம் வளர்கிறது என்று ஸ்டாலின் பீற்றிக்கொள்கிறார். அப்படி இருக்கும்போது, எதற்காக பணம் கொடுக்க வேண்டும்?


ஆரூர் ரங்
செப் 02, 2025 22:14

உலகிலேயே மிகப்பெரிய கடனாளி நாடு இறக்குமதி வரி போட்டதற்கு இந்தப் பாடு.


இந்தியன்
செப் 02, 2025 20:34

ஜவுளி ஆடை ஏற்றுமதியில் பணிபுரியும் லட்சக்கனக்கானோர் வேலை இழக்காமல் பணிபுரிய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, திருப்பூர் ஏற்றுமத்தியாளர் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்று தொழிலாளர்களின் வாழ்வுரிமையை காக்கவேண்டிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 02, 2025 20:32

பேரல் ஒன்றுக்கு $2.50 லிருந்து $4 வரை ரஷ்யா விலை குறைப்பு செய்ய ஆலோசனை செய்வதாக செய்திகள் வெளிவருகின்றன. இது உண்மையாக இருந்தால் அரசால் ஓரளவு தொழில்துறைக்கு உதவி செய்யும் நெருக்கடியை சமாளிக்க முடியும். எதிர்காலத்தில் ரஷ்யாவிற்கு இந்தியா வேறு வழிகளில் இந்த உதவியை திரும்ப வழங்கும். ரஷ்யா = நண்பேன்டா.


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 02, 2025 20:26

பாதிப்புகள் என்ன, எப்படியான நிவாரணம் வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தொழில் துறையினரை நேரடியாக சந்தித்து கேட்டு அறிவது பாராட்டப்பட வேண்டிய நிகழ்வு. பின்னர் அமைச்சகத்தில் உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்து, தகுந்த நிவாரண வழிமுறைகளை அறிவுறுத்துவார்கள்.அதை அமைச்சரவை பகுத்தாய்ந்து தேவையான அரசு ஆணைகளை வழங்குவார்கள். தொழில்துறையினர் சற்று பொறுமை காக்க வேண்டும். இதனிடையே திரைமறைவில் இரு நாடுகளும் தூதரக அளவில் பிரச்சனையை சுமுகமாக தீர்க்க பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர். ஊகத்தில் வெளிவரும் பத்திரிகை செய்திகளை முழுமையாக நம்புவதும், அதன் அடிப்படையில் அரசியல் பேச்சுகள் எழுவதும் தவிர்க்கப்பட வேண்டும். சாம, பேத,தான, தண்டம் என நான்கு வழிகளிலும் அரசு காய்களை நகர்த்திக்கொண்டுதான் இருக்கிறது. அரசுக்கு சற்று கால அவகாசம் கொடுத்து நாம் காத்திருப்போம்.


ஆரூர் ரங்
செப் 02, 2025 20:25

பயங்கரவாத பாகிஸ்தானுக்கு உதவும் நாட்டின் உற்பத்திப் பொருட்களையும் பாகிஸ்தான் பொருட்களைப் போலவே பாரத மக்கள் நிராகரிக்க வேண்டும்.


Prabu
செப் 02, 2025 20:20

இவர்கள் சம்பாதித்தது பல பல கோடி. உற்பத்தி எனும் பேரில் நீரை மாசுபடுத்துகின்றனர். இவர்களுக்கு ஒரு காசு கூட அரசு தர கூடாது