உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கைதியின் இதயத்தில் ஓராண்டாக சிக்கியிருந்த ஊசிகள் அகற்றம்

கைதியின் இதயத்தில் ஓராண்டாக சிக்கியிருந்த ஊசிகள் அகற்றம்

இந்தூர் : மத்திய பிரதேசத்தில் விசாரணை கைதி இதயத்தில் ஓராண்டாக சிக்கியிருந்த மூன்று ஊசிகளை அரசு மருத்துவமனை டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர். மத்திய பிரதேசத்தின் இந் துா ரில், குற்றவழக்கு ஒன்றில் விசாரணை கைதியாக 29 வயது நபர் உள்ளார். இவருக்கு இதயத்தில் கடும் வலி ஏற்பட்டதால், அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள், 'சி.டி.ஸ்கேன்' பரிசோதனை செய்து பார்த்தனர். அதில், அவரது இதயத்தில் 2.5 அங்குலம் நீளத்தில் மூன்று ஊசிகள் குத்தியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவற்றை எட்டு மணி நேரம் சிக்கலான அறுவை சிகிச்சை செய்து சுமித் பிரதாப் சிங் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் அகற்றினர். தற்போது கைதி நலமுடன் உள்ளார். இது குறித்து டாக்டர் சுமித் பிரதாப் கூறியதாவது: அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கைதி, கடந்த ஆண்டு டில்லியில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு வேறு ஒரு நபருடன் பணம் தொடர்பாக சண்டை எழுந்தது. அதில், பிளாஸ்டிக் குண்டுகள், ஊசிகள் போன்றவற்றை செலுத்த பயன்படும், 'ஏர் கன்' வைத்து கைதியை மற்றொருவர் தாக்கியுள்ளார். இதில் கைதியின் மார்பு, கழுத்து, தலையில் பல ஊசிகள் பாய்ந்தன. உடனடியாக அவரது உடலில் இருந்த சில ஊசிகள் அகற்றப்பட்டன. ஆனால் இதயத்தில் சிக்கிய மூன்று ஊசிகள் அப்போது கவனிக்கப்படவில்லை. அந்த ஊசிகளுடன் அவர் ஓராண்டு உயிருடன் இருந்ததே மருத்துவ துறையில் அதிசயம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !