உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கரூர் விவகாரத்தில் போலீஸ் மிரட்டல் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல்

கரூர் விவகாரத்தில் போலீஸ் மிரட்டல் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரி தாக்கல் செய்த மனுவை திரும்ப பெறும்படி போலீசார் அழுத்தம் கொடுப்பதாக, பிரபாகரன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில், கடந்த மாதம், 27ல், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அரசு சார்பில் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல, அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக்கோரி, பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த சிலரும், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என, தமிழக வெற்றிக் கழகம் சார்பிலும், உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்பு குழுவை அமைத்ததுடன், வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி அமர்வு முன், பிரபாகரன் என்பவர் சார்பில் நேற்று ஆஜரான வழக்கறிஞர், 'கரூர் விவகாரத்தில், சி.பி.ஐ., விசாரணை கேட்டு நானும், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தேன். 'அந்த மனுவை திரும்ப பெறும்படி போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் மிரட்டல் விடுக்கின்றனர். உச்ச நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு, எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்று, கோரிக்கை விடுத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் ஏற்கனவே சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே, எதுவாக இருந்தாலும் சி.பி.ஐ.,யிடம் முறையிடுங்கள்' என்றனர். -டில்லி சிறப்பு நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை