நிதிஷ் முதல்வராக மாட்டார்; லாலு மகன் தேஜஸ்வி ஆரூடம்
பாட்னா: ''பீஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும், நிதிஷ் குமார் முதல்வராக மாட்டார்,'' என, ஆர்.ஜே.டி., எனப்படும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். பீஹாரில் நவம்பர் 6 மற்றும் 11ல் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய, 'மஹாகட்பந்தன்' கூட்டணி க்கும், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் நிலவுகிறது. ச ட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அங்கு தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. பீஹாரில் சஹர்சா மாவட்டத்தின் சிம்ரி பக்தியார்பூரில் மஹாகட்பந்தன் கூட்டணியின் பிரசார கூட்டத்தில் தேஜஸ்வி யாதவ் நேற்று பேசியதாவது: தேர்தலுக்குப் பின்னரே தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே தெளிவாக தெரிவித்து விட்டார். எனவே, அக்கூட்டணிக்கு மக்கள் ஓட்டளித்து மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கூட, நிதிஷ் குமார் முதல்வராக மாட்டார். தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில், 11 ஆண்டுகளாகவும், மாநிலத்தில், 20 ஆண்டுகளுக்கு மேலாகவும் ஆட்சியில் இருந்தாலும், பீஹாரில் ஏழ்மையும், வேலைவாய்ப்பின்மையும் தொ டர்ந்து நீடித்து வருகிறது . இதேபோல் மாநிலத்தில் நிலவும் ஊழல் மற்றும் அதிகரித்துள்ள கிரிமினல் செயல்பாடுகள் பீஹாரியான எனக்கு மனவேதனையை அளித்துள்ளது. பிரதமர் மோடிக்கு லாலு பயப்படவில்லை. அதேபோல் அவரது மகனான நானும் மோடிக்கு அஞ்சமாட்டேன். எனக்கு வாய்ப்பு அளியுங்கள், தேசிய ஜனநாயக கூட்டணியால் 20 ஆண்டுகள் செய்ய முடியாததை, நான் 20 மாதங்களில் செய்வேன். இவ்வாறு அவர் பேசினார்.