| ADDED : நவ 02, 2024 01:20 AM
விசாகப்பட்டினம்: ரயிலில் அசுத்தமான கழிப்பறை, 'ஏசி' சரியாக வேலை செய்யவில்லை என புகார் அளித்த பயணிக்கு, 30,000 ரூபாய் வழங்கும்படி, ரயில்வே நிர்வாகத்துக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.ஆந்திராவைச் சேர்ந்த வி.மூர்த்தி என்பவர், 2023 ஜூன் 5ல், திருப்பதியில் இருந்து விசாகப்பட்டினத்தில் உள்ள துவ்வாடா என்ற நகருக்கு, திருமலை விரைவு ரயிலில் தன் குடும்பத்தினருடன் சென்றார். மூன்றாம் வகுப்பு 'ஏசி' பெட்டியில் பயணித்த அவர், கழிப்பறைக்கு சென்றபோது தண்ணீர் வரவில்லை. மேலும், 'ஏசி'யும் சரிவர வேலை செய்யவில்லை; ரயில் பெட்டியும் அசுத்தமாக இருந்துள்ளது.துவ்வாடா ரயில் நிலையத்தில் இறங்கியதும், இதுகுறித்து அதிகாரிகளிடம் மூர்த்தி புகார் அளித்தார். எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால் அதிருப்தி அடைந்த மூர்த்தி, விசாகப்பட்டினத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் கமிஷனில் புகார் அளித்தார். இந்த குற்றச்சாட்டுகளை ரயில்வே நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்தது. இந்த வழக்கில், மாவட்ட நுகர்வோர் குறைதீர் கமிஷன் சமீபத்தில் அளித்த தீர்ப்பில், 'பயணியருக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது ரயில்வே நிர்வாகத்தின் கடமை மற்றும் பொறுப்பு. கழிப்பறை, 'ஏசி' போன்ற அனைத்துக்கும் சேர்த்துதான், டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. 'அடிப்படை வசதிகள் இல்லாததால் மன உளைச்சலுக்குள்ளான மூர்த்திக்கு, 25,000 ரூபாய் மற்றும் வழக்கு செலவுகளை ஈடுகட்ட கூடுதலாக, 5,000 ரூபாயை தெற்கு மத்திய ரயில்வே வழங்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.