பஸ் மார்ஷல்களை மீண்டும் நியமிக்க பரிந்துரை வரவில்லை: கவர்னர் கைவிரிப்பு
புதுடில்லி:“கடந்த ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்ட பஸ் மார்ஷல்களை மீண்டும் நியமனம் செய்வதற்கான பரிந்துரை எதுவும் வரவில்லை,” என, துணைநிலை கவர்னர் சக்சேனா கூறியுள்ளார்.டில்லி அரசு பஸ்களில் பயணியருக்கு உதவி செய்ய 10,000 பஸ் மார்ஷல்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். வருவாய் மற்றும் நிதித் துறைகள் இந்த நியமனத்துக்கு ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து, 10,000 பேரை பணிநீக்கம் செய்து, கடந்த ஆண்டு நவம்பரில் துணைநிலை கவர்னர் சக்சேனா உத்தரவிட்டார்.மீண்டும் பணி நியமனம் செய்யக்கோரி பஸ் மார்ஷல்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நிருபர்களிடம் பேசிய முதல்வர் ஆதிஷி சிங், “பணி நீக்கம் செய்யப்பட்ட பஸ் மார்ஷல்கள் 10,000 பேரும் மாசுக் கட்டுப்பாட்டு பணிக்கு பயன்படுத்தப்படுவர்,”என, கூறியிருந்தார்.இந்நிலையில், துணைநிலை கவர்னர் சக்சேனா, முதல்வர் ஆதிஷிக்கு அனுப்பியுள்ள கடிதம்:நீங்களும் உங்கள் கட்சித் தலைவர்களும் பஸ் மார்ஷல்களை மீண்டும் நியமனம் செய்து, கடன் வாங்கி அரசை நடத்தலாம். ஆனால் பொருளாதார ரீதியாக நலிவடைந்த மற்றும் ஆதரவற்ற மக்களின் நலன் குறித்து யோசிக்காமல் செயல்படுவது எந்த வகையிலும் சரியல்ல. ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் இந்த விவகாரத்தில் விரும்பத்தகாத அரசியல் செய்கின்றனர். நவம்பர் 1 முதல் பஸ் மார்ஷல்களின் மறு நியமனத்தை உறுதி செய்ய உத்தரவிட்டு அதற்கான விரிவான திட்டத்தை கேட்டு இருந்தேன். பஸ் மார்ஷல்களை மீண்டும் நியமனம் செய்வது குறித்து டில்லி அரசிடம் இருந்து எந்தப் பரிந்துரையும் இதுவரை வரவில்லை. டில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு பஸ் மார்ஷல்களாக இருந்தவர்களை மீண்டும் நியமிக்க பரிந்துரையை அனுப்ப அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.