திருவனந்தபுரம்: பாலியல் புகாருக்கு ஆளான மலையாள நடிகரும், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.,வுமான முகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூட்டணி கட்சியே கோரிக்கை விடுத்துள்ளதால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.ஹேமா கமிட்டி அறிக்கை
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது. இந்த கமிட்டியின் அறிக்கையைத் தொடர்ந்து, நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசி குற்றவாளிக்கு வயிற்றில் புளியை கரைக்க செய்து வருகின்றனர்.பாலியல் வழக்கு
பிரபல நடிகரும், கொல்லம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ.,வுமான முகேஷுக்கு எதிராகவும் புகார்கள் கிளம்பின. பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் என்பதால் உடனடியாக வழக்கு பதிவு செய்ய அரசு உத்தரவிட்டது; வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. ராஜினாமா செய்யுங்க!
இதனால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ முகேஷ், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்று மாநிலம் முழுவதும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. கேரளா சினிமா உலகிலும் அவருக்கு ஆதரவாக ஒருவர் கூட பேசவில்லை. எதிர்க்கட்சிகள் கோரிக்கையை ஆளும் கட்சி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சியே கோரிக்கை விடுத்துள்ளது, இடது முன்னணி அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பினோய் விஸ்வம் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். முகேஷ் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு, தார்மீக பொறுப்பேற்று அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி நிற்க வேண்டும் என கட்சியினர் விரும்புவதாக பினோய் விஸ்வம் தெரிவித்தார்.ஆதாரத்தை காட்டுவேன்!
இதற்கிடையே, 'புகார்தாரர் பணம் கேட்டு மிரட்டினார். புகார் அளித்த பெண்ணின் சதியை நிரூபிக்க வாட்ஸ்அப் சாட் உள்ளிட்ட ஆதாரங்களை சமர்ப்பிப்பேன்' என எம்.எல்.ஏ.,முகேஷ் கெத்தாக பேசி வருகிறார். கொச்சியில் உள்ள நீதிமன்றம் செப்டம்பர் 3ம் தேதி வரை முகேஷ்-ஐ கைது செய்ய தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.முஷ்டி முறுக்கி நிற்கும் முகேஷை, முதல்வர் பினராயி விஜயன் காப்பாற்றுவாரா, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யும்படி சொல்வாரா என்பதே இப்போது கேரள அரசியல், சினிமா உலகினரின் பிரதான கேள்வியாக உள்ளது.ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியானதை தொடர்ந்து, பல்வேறு இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீது மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் வழக்குகள் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.