பயப்பட ஒன்றும் இல்லை; வெடிகுண்டு புரளி குறித்து மத்திய அமைச்சர் ராம் மோகன் பேட்டி
புதுடில்லி: 'விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் வருவது பற்றிபொதுமக்கள் பயப்பட ஒன்றுமில்லை. மத்திய அரசு தேவையான அனைத்து நடடிக்கைகளும் எடுத்து வருகிறது' என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் மூலம் இந்திய விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது; குறிப்பாக 'எக்ஸ்' தளம் மூலம் மிரட்டல்கள் அதிகம் வருகின்றன; இந்நிலையில், சமூகவலைதள நிறுவனங்களின் செயல்பாட்டை மத்திய அரசு கடுமையாக கண்டித்துள்ளது.இது தொடர்பாக, ஆங்கில செய்தி சேனலுக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு அளித்த பேட்டி: 170க்கும் மேற்பட்ட விமானங்கள் வெடிகுண்டு அச்சுறுத்தல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. நான் இதில் எந்த அவசர முடிவு எடுக்கமாட்டேன். முழுமையான விசாரணை நடக்கும் வரை காத்திருப்போம். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்தவுடன், அப்போது தான் சதி உள்ளதா அல்லது பண்டிகைக் காலம் தொடர்பாக ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்பதை நாங்கள் கூற முடியும்.புலனாய்வு அமைப்பினர் மற்றும் சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் கவனித்து கொண்டு இருக்கிறார்கள். அச்சுறுத்தல்கள் காரணமாக, தொழில் துறையில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல்களுக்கு பின்னால் உள்ள தனிநபர்கள் விமானப் பயணம் செய்ய தடை விதிக்கப்படும். நாங்கள் விமான நிலையங்களில் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்துகிறோம்.பயப்பட வேண்டாம்!
இது எந்த விதமான பயத்தையும், பீதியையும் பரப்ப வேண்டிய தருணம் அல்ல. நாட்டு மக்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். பயப்பட ஒன்றுமில்லை. மத்திய அரசு தேவையான அனைத்து நடடிக்கைகளும் எடுத்து வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.