ரூ.661 கோடி சொத்துகளை பறிமுதல் செய்ய நோட்டீஸ் நேஷனல் ஹெரால்டு வழக்கில் அதிரடி
புதுடில்லி: 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை சொத்து பரிவர்த்தனையில் நடந்துள்ள மோசடிகள் தொடர்பாக முடக்கப்பட்ட, 661 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத் துறை 'நோட்டீஸ்' அளித்துள்ளது.நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை, ஏ.ஜே.எல்., எனப்படும் 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்' நிறுவனம் நடத்தி வந்தது. நிதி நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனத்தை, 50 லட்சம் ரூபாய்க்கு, 'யங் இந்தியன்ஸ்' நிறுவனம் வாங்கியது. வழக்கு பதிவு
யங் இந்தியன்ஸ் நிறுவனத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர். இதைத்தவிர, காங்கிரஸ் மூத்த தலைவர்களும் இதில் உள்ளனர்.ஏ.ஜே.எல்., நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பறிக்கும் வகையில், இந்த பரிவர்த்தனை நடந்ததாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, 2014ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை, டில்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.இதனடிப்படையில், இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை, 2021ல் வழக்குப் பதிவு செய்து விசாரித்தது.விசாரணையில், 988 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான, 661 கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று சொத்துகளை முடக்கியது.இதற்கு, பண மோசடி தடுப்புச் சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்தது. இதன் அடுத்த கட்டமாக, இந்த மூன்று சொத்துகளை பறிமுதல் செய்யும் வகையில், அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடவடிக்கை
டில்லி, மஹாராஷ்டிர மாநிலம் மும்பை, உத்தர பிரதேசத்தின் லக்னோவில், நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்ய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதைத்தவிர, மும்பையில் உள்ள கட்டடத்தில் இருந்து செயல்படும் தனியார் நிறுவனத்துக்கு, இனி வாடகையை, அமலாக்கத் துறை இயக்குநர் பெயருக்கு அனுப்பவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.