உள்ளூர் செய்திகள்

நோட்டீஸ்!

-டில்லி சிறப்பு நிருபர்- 'டில்லியில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய பேராட்டத்தை கலைக்க அதிகமான போலீசார் குவிக்கப்பட்டது ஏன்? இது தொடர்பாக மத்திய அரசும், டில்லி போலீசாரும் பதில் அளிக்க வேண்டும். இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள், கண்காணிப்பு கேமரா பதிவுகள் உட்பட அனைத்து ஆதாரங்களையும் அழிக்காமல் வைத்திருக்க வேண்டும்' என, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ___________________ 'நீட்' வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று, மத்திய உயர் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி பார்லி., மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், கரப்பான்பூச்சி கட்சியினர், பார்லிமென்ட் நோக்கி பேரணி நடத்தினர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடுப்பு அரண்களை தாண்டி செல்ல போராட்டக்காரர்கள் முயன்றனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீசார் மீது போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு போலீசாரும் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை கலைத்தனர். இதனால், அப்பகுதியே போர்களம் போல காட்சியளித்தது. இந்நிலையில், மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க அளவுக்கு அதிகமான போலீசார் குவிக்கப்பட்டது, தடியடி நடத்தியது தொடர்பாக விசாரிக்க கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டில்லி போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, ''இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள், போலீஸ் ஸ்டேஷன் அல்லது மாஜிஸ்திரேட்டை அணுகி தனிப்பட்ட முறையில் புகார் அளிக்க வேண்டும்,'' என வாதாடினார். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'பெரும்பான்மை மக்கள் பங்கேற்ற போராட்டத்தில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. அப்படி இருக்கும்போது, ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் எப்படி புகார் அளிக்க முடியும்' என கூறி, அவரது வாதத்தை ஏற்க மறுத்தனர். இதைத் தொடர்ந்து மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஹரன், கோபால் சங்கரநாராயணன் மற்றும் விகாஸ் சிங் ஆகியோர் போலீசாருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது குறித்து அவர்கள் முன்வைத்த வாதம்: அமைதியான முறையில் நடந்த இந்த பேரணியை கலைக்க அளவுக்கு அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில், 90க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். சீருடையில் பெயர் பேட்ஜ் அணியாத போலீசாரும், சாதாரண உடையில் இருந்தவர்களும் பெண் போராட்டக்காரர்களிடம் தகாத முறையில், நடந்து கொண்டனர். அவர்களது அந்தரங்க உறுப்புகளில் கூட தாக்குதல் நடத்தினர். ஆணிகள் அடிக்கப்பட்ட லத்திகள், பெல்லட் குண்டுகள் மற்றும் மின்சார பேட்டன்களைப் பயன்படுத்தி மாணவர்களைத் தாக்கியுள்ளனர். எனவே, டில்லி போலீசாரின் இந்த அத்துமீறல் குறித்து விசாரணை நடத்த வேண்டும். சொந்த அதிகாரிகளுக்கு எதிரான இந்த புகார்கள் மீது டில்லி போலீஸ் நியாயமாக விசாரணை நடத்தாது. எனவே, விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அதே சமயம், 'போராட்டக்காரர்கள் தரப்பில் இருந்து தான் முதலில் வன்முறை வெடித்தது. அவர்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் 118 போலீசார் காயமடைந்தனர். பொதுச் சொத்துகள் சேதமடைந்துள்ளன' என போலீசார் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வழக்கின் உண்மைதன்மை குறித்து இப்போதைக்கு எதுவும் கூற முடியாது. மாணவர் போராட்டத்தை கலைக்க அதிகமான போலீசார் எதற்காக குவிக்கப்பட்டனர்? இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் டில்லி போலீசார் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும். சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த, 'சிசிடிவி' காட்சிகள், போலீசார் உடலில் அணிந்திருந்த கேமராவில் பதிவான காட்சிகள், பிற வீடியோ காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை அழிக்காமல் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை செப்., 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். முன்னதாக நேற்று முன்தினம், இதே விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, அவசரமாக விசாரிக்க டில்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. அப்போது, 'இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை இழுக்காதீர்கள்' என கருத்து தெரிவித்து இருந்தது. அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு 'நீட்' வினாத்தாள் கசிவு தொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தை அவசர வழக்காக கருதி விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய அமர்வில், ஆஜரான வழக்கறிஞர் நரேந்திர மிஸ்ரா, மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கோரினார். இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், ''நீதிமன்றத்தின் நேரத்தையும், உங்கள் நேரத்தையும் வீணடிக்காதீர்கள்,'' என்றார். அப்போது மீண்டும் குறுக்கிட்ட வழக்கறிஞர் நரேந்திர மிஸ்ரா, ''போலீசார் தாக்கியதாக கூறப்படும் வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன,'' என்றார். இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், ''வீடியோக்களை பார்ப்பதற்கு எங்களுக்கு நேரமில்லை,'' என கூறி, அவசரமாக விசாரிக்க மறுப்பு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை