தகிக்கிறது ஒடிசா; நாட்டிலேயே அதிக வெப்பநிலை பதிவான பவுத்
புவனேஸ்வர்; நாட்டிலேயே அதிக வெப்பம் ஒடிசாவில் உள்ள பவுத் பகுதியில் பதிவாகி இருக்கிறது.உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் காலநிலை முன் எப்போதும் இல்லாத நிலையில் இருக்கிறது. கடும் வெயில் வாட்டும் பகுதிகளில் மழையும், மழை பெய்யும் இடங்களில் வெயிலும் பதிவாகிறது. இந்தியாவை பொறுத்தவரை 2024ம் ஆண்டு 1901க்கு பின்னர் அதிக வெப்பமான ஆண்டாக அறிவிக்கப்பட்டது. 2025ம் ஆண்டும் காலநிலை மாற்றங்களுடன் காணப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் காலநிலை மாறி வருகிறது. எதிர்பாராத தருணங்களில் மழை, வெயில் என சீதோஷ்ணத்தில் வித்தியாசம் காணப்படுகிறது.இந் நிலையில் ஒடிசாவில் வெப்பம் வாட்டி வதைக்கிறது. அம்மாநிலத்தின் பல நகரங்களில் தினசரி வெப்பநிலையில் மாற்றம் நிலவுகிறது.ஒடிசாவின் பவுத் பகுதியில் இன்றைய (மார்ச்16) வெப்பநிலை 43.6 டிகிரி செல்சியசாக பதிவாகி இருக்கிறது. நாட்டில் இன்று இங்குதான் அதிக வெப்பம் பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. ஜர்ஸ்குடா பகுதி 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி 2ம் இடத்தில் இருக்கிறது. பலங்கிர், அங்குல் நகரங்களையும் வெயில் விட்டு வைக்கவில்லை. அடுத்து வரக்கூடிய நாட்களில் வெயில் மேலும் வாட்டும் என்றும், மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.