உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு நாடு, ஒரு தேர்தல் மசோதா தாக்கல்

ஒரு நாடு, ஒரு தேர்தல் மசோதா தாக்கல்

ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்த வகை செய்யும் மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அரசியல் சட்ட திருத்த மசோதா என்பதால், விதிப்படி ஓட்டெடுப்பு நடந்தது. ஆதரவாக 269 பேர், எதிர்த்து 198 பேர் ஓட்டளித்தனர். பின், ஜே.பி.சி., என்றழைக்கப்படும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மெஹ்வால் மசோதாவை தாக்கல் செய்தவுடன், மசோதாவுக்கு சபையில் ஆதரவு இருக்கிறதா என்பதை அறிய, 'டிவிஷன்' எனப்படும் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சிலர் வலியுறுத்தினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=20la94vu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உடனே சபை கதவுகள் மூடப்பட்டன. புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் உள்ள நவீன வசதிகளில் ஒன்றான, மின்னணு ஓட்டுப்பதிவு வசதி முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது. சபையில் இருந்தவர் களில், 269 பேர் மசோதாவை ஆதரித்தும், 198 பேர் எதிர்த்தும் ஓட்டளித்தது திரையில் தெரிந்தது. முன்னதாக, மசோதா குறித்து உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். மணீஷ் திவாரி, காங்கிரஸ்: சாத்தியமே இல்லாத விஷயத்தை அரசு கையில் எடுக்கிறது. மாநில அரசுகளும், மத்திய அரசும் ஒன்றல்ல. இந்தியா என்பதே, பல்வேறு மாநிலங்களின் கூட்டமைப்பு தான். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மத்திய அரசு சர்வ அதிகாரமும் கொண்டிருக்கும். அது, மாநில நலன்களுக்கு எதிரானது.தர்மேந்திர யாதவ், சமாஜ்வாதி: இரண்டு நாட்களுக்கு முன் தான் அரசமைப்பு சட்டத்தை காப்போம் என புகழ்ந்து தள்ளினீர்கள். இன்றோ அரசமைப்பு சட்டத்தின் அடிப்படையையே அழிக்கப் பார்க்கிறீர்கள். அரசமைப்பு சட்டத்தை உருவாக்கிய சிற்பிகள், மிகுந்த ஆலோசனைக்கு பிறகே மத்திய மற்றும் மாநில அரசுகளை பல்வேறு அடையாளங்களுடன் வகைப்படுத்தினர். அம்பேத்கரை விட நீங்கள் ஒன்றும் அறிவாளி கிடையாது. இந்த மசோதா அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கு எதிரானது. கல்யாண் பானர்ஜி, திரிணமுல் காங்கிரஸ்: லோக்சபாவின் ஆயுளும், சட்டசபைகளின் ஆயுளும் ஒரே மாதிரி இருக்கவே முடியாது. தேர்தல் சீர்திருத்தம் என்பது இது கிடையாது. ஒரே ஒரு மனிதரின் ஆசையை நிறைவேற்றவே, இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது.கவுரவ் கோகோய், காங்கிரஸ்: தேர்தல் கமிஷனுக்கு அதிகாரத்தை குவிக்கிறீர்கள். தேர்தல் எப்போது நடத்துவது என்பதை அது தீர்மானிக்க கூடாது. கட்டற்ற அதிகாரத்தை தேர்தல் கமிஷனுக்கு அளிப்பது நல்லதல்ல. சந்திரசேகர் பெமானி, தெலுங்கு தேசம்: எந்தவித குழப்பமுமின்றி, உறுதியாக இம்மசோதாவை வரவேற்கிறேன்.

இறுதியாக சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மெஹ்வால் பேசியதாவது:

அரசமைப்பு சட்டத்துக்கு எதிரான எதையும் இந்த அரசு செய்யாது. தேர்தல்களையும் ஒருசேர நடத்த வேண்டும் என்ற கோரிக்கை, 46 ஆண்டுகளாக இருந்து வருகிறது. யாரும் கண்டுகொள்ளவில்லை. மோடி பிரதமராக வந்த பிறகு தான் இதை கையில் எடுத்திருக்கிறார். மசோதா குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம். பார்லிமென்ட் கூட்டுக்குழு ஆய்வு செய்யட்டும். இவ்வாறு அவர் பேசினார்.

எம்.பி.,க்களுக்கு நோட்டீஸ்

முன்னதாக, ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்படுவதால், அனைத்து எம்.பி.,க்களும் கட்டாயம் சபைக்கு வர வேண்டும் என, பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில், தங்கள் எம்.பி.,க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், 20க்கும் மேற்பட்ட பா.ஜ., - எம்.பி.,க்கள் சபைக்கு வரவில்லை. இதையடுத்து, இது குறித்து விளக்கம் அளிக்கும்படி அந்த எம்.பி.,க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

விரும்பியதை பேசிய பாலு?

மசோதாவை அறிமுக நிலையிலேயே தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருந்தன. பார்லிமென்ட் கூட்டுக்குழு என்ற பேச்சையே யாரும் எடுக்கவில்லை. அந்த நிலையில் தான், தி.மு.க உறுப்பினர் பாலு, ''மசோதாவை பார்லிமென்ட் கூட்டுக்குழுவுக்கு அனுப்பலாம்,'' என்ற யோசனையுடன் பேச்சை முடித்தார். உடனே, உள்துறை அமைச்சர் அமித் ஷா எழுந்து, அதை ஆமோதித்தார். ''மசோதாவை பார்லிமென்ட் கூட்டு குழுவுக்கு அனுப்பி ஆய்வு செய்யலாம் என்று பாலு கூறினார். மத்திய அமைச்சரவையில் பேசும்போது பிரதமரும் அப்படித்தான் விருப்பப்பட்டார். எனவே கூட்டுக்குழுவுக்கு அனுப்பி, அங்கு அனைத்துக் கட்சி உறுப்பினர்களும், விரிவாக விவாதிக்கலாம்,'' என்றார். தேசியவாத காங்., உறுப்பினர் சுப்ரியா சுலேயும் இந்த யோசனையை தெரிவித்தாலும், அமித் ஷா தன் பேச்சில் குறிப்பிட்டது பாலுவின் பெயரைத்தான்.- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
டிச 18, 2024 13:57

காங்கிரஸ் எம்பியாக உள்ள சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான குழுவினர் பரிந்துரையின் பேரில்தான் மத்திய அரசு இந்த ஒரே நேரத்தில் தேர்தல் சீர்திருத்தத்தை கொண்டு வருகிறார்கள். காங்கிரசுக்குத்தானே பெருமை?.


Jay
டிச 18, 2024 13:33

கலைஞர் நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டுமென்று கூறி இருக்கிறாராமே? திமுகவிற்கு பலன் இல்லாமல் இப்படி ஒரு திட்டத்தை கூறி இருப்பாரா? யோசித்துப் பார்த்தால் இந்த திட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட போவது பாஜக மாநில அரசியல்தான். தன் கட்சிக்கு பாதிப்பு வந்தாலும் நாட்டிற்கு நல்லது செய்ய நினைக்கும் ஒரு கட்சி ஆட்சியில் இருப்பது மிக நன்றான விஷயம்.


Jay
டிச 18, 2024 13:29

தமிழ்நாட்டில் வரும் 2026ல் நடக்கும் தேர்தலில் வரும் கட்சி முழு ஐந்து வருடங்கள் ஆட்சியில் இருக்கும் 2031இல் நடக்கும் தேர்தலில் வரும் கட்சி 3 வருடங்கள் மட்டுமே இருக்கும். காங்கிரஸ் ஆரம்ப காலத்தில் பல சட்ட மன்றங்களை கலைப்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம் தற்பொழுது மாற்றம் பெறுகிறது. காங்கிரஸ் செய்த பல தவறுகளை சரி செய்த இந்த ஆட்சி தற்போது இந்த தவறையும் சரி செய்துள்ளார்கள்.


Kasimani Baskaran
டிச 18, 2024 06:39

மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் இருந்தால்தான் மசோதா நிறைவேறும் என்று திராவிட விதியை பாராளுமன்ற சரித்திரத்தில் முதல் முறையாக கேட்ட எம்பிக்கள் குதூகலம்.


கிஜன்
டிச 18, 2024 01:50

20க்கும் மேற்பட்ட உங்க ஆட்களையே உங்களால ஒழுங்கா வரவழைத்து ஒட்டு போடவைக்க முடியல .... இதுல நாடுமுழுவதும் உள்ள மக்களை ஒரே நேரத்துல வாக்கு சாவடிக்கு அழைத்து வந்து விடுவீர்களா ?


தாமரை மலர்கிறது
டிச 18, 2024 01:23

ஒரே நாடு ஒரே தேர்தல் அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கும். அடிக்கடி தேர்தல் நடப்பது ஜனநாயகத்தையே கேலி செய்வது போன்றது. ஓட்டுக்கு பணம் போன்ற அனாவசிய செலவுகளை தவிர்க்கும். ஊழல்கள் குறையும். லஞ்சலாவண்யம் தவிர்க்கப்படும். இந்தியா வல்லரசாக, ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம். எதிர்க்கும் அரசியல்வாதிகளை சஸ்பெண்ட் செய்து, சிம்பிள் மெஜாரிட்டி என்ற அடிப்படையில் இந்த மசோதா உடனே நிறைவேற்றப்படவேண்டும்.


முக்கிய வீடியோ