உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பழைய வாகனத்துக்கு புது சட்டம் எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி சிங் கோரிக்கை

பழைய வாகனத்துக்கு புது சட்டம் எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி சிங் கோரிக்கை

புதுடில்லி:“காலாவதியான மோட்டார் வாகனங்கள் மீதான நடவடிக்கைக்கு, மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் சட்டம் இயற்ற வேண்டும். அதற்கு நாங்களும் ஆதரவு அளிப்போம்,”என, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஆதிஷி சிங் கூறினார்.ஆயுட்காலம் முடிந்த மோட்டார் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்ற உத்தரவு கடந்த, 1ம் தேதி அமல்படுத்தப்பட்டது. பெட்ரோல் நிலையங்களில் போலீசார், ஆயுட்காலம் முடிந்த வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, மத்திய அரசின் காற்று தரக்குழுவிடம் உத்தரவை உடனடியாக நிறுத்தி வைக்க, டில்லி அரசு வலியுறுத்தியது. அதனால், வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை மூன்றே நாட்களில் நிறுத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி சிங், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:பா.ஜ., அரசு டில்லி மக்களை ஏமாற்றி வருகிறது. ஆயுட்காலம் முடிந்த வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைக்கு மக்களிடன் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா, நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு, மத்திய காற்று தர குழுவுக்கு கடிதம் எழுதியதாக கூறினார். பா.ஜ., அரசே அதை செய்திருக்க முடியும். ஆனால், அமைச்சர் கடிதம் எழுதினார் அதனால்தான் நடவடிக்கை நிறுத்தப்பட்டது என மக்களை ஏமாற்று கின்றனர்.காலாவதி மோட்டார் வாகனங்களுக்கு ஒரு வாரத்துக்குள், பா.ஜ., அரசு ஒரு அவசர சட்டம் இயற்ற வேண்டும். அவசரச் சட்டம் வாயிலாகவோ அல்லது சட்டசபைக் சிறப்புக் கூட்டம் வாயிலாகவோ இந்தப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும். அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி ஆதரவு அளிக்கும். இதற்கு டில்லி அரசுக்கு அதிகாரம் இல்லையென்றால், மத்திய அரசு இதைச் செய்யலாம்.இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வதாக டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறுகிறார். உச்ச நீதிமன்றம் சேவை கட்டுப்பாடு குறித்த தீர்ப்பை வழங்கிய பின், நீதிமன்றத்துக்குச் சென்றால் அது நிராகரிக்கப்படும் என பா.ஜ.,வுக்கு தெரியும். அதன்பின், இது உச்ச நீதிமன்ற உத்தரவு என முதல்வர் கூறுவார். உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வது டில்லி பா.ஜ., அரசின் தந்திரம்.இவ்வாறு அவர் கூறினார். நாடு முழுதும் பின்பற்றப்படும் விதிமுறைகளுக்கு ஏற்ப, ஆயுட்காலம் முடிந்த மோட்டார் வாகனங்கள் மீது, தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சீரான விதிமுறைகளை அனுமதிக்கக் கோரி, டில்லி அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம் என முதல்வர் ரேகா குப்தா கூறியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி