மேலும் செய்திகள்
மின்வெட்டு விவகாரம் பா.ஜ., - ஆம் ஆத்மி மோதல்
12-Apr-2025
புதுடில்லி:முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ஆதிஷி சிங்குக்கு வழங்கப்பட்டு இருந்த, 'இசட்' பிரிவு பாதுகாப்பை, 'ஒய்' பிரிவுக்கு தரம் குறைக்க டில்லி மாநகரப் போலீசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆம் ஆத்மி ஆட்சியில் அமைச்சராக இருந்த ஆதிஷி சிங், முதல்வராக பொறுப்பேற்ற போது அவருக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.கடந்த பிப்ரவரியில் நடந்த தேர்தலில் பா.ஜ., அரசு பொறுப்பேற்ற நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக ஆதிஷி சிங் பதவியேற்றார். அதனால், அவருக்கு வழங்கப்பட்டு இருந்த இசட் பிரிவு பாதுகாப்பு தொடர்ந்தது. இந்நிலையில், ஆதிஷி சிங்குக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து மத்திய பாதுகாப்பு நிறுவனங்கள் மதிப்பாய்வு செய்து, மத்திய உள்துறை அமைச்சகத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. அதைத் தொடர்ந்து, ஆதிஷிக்கு இசட் பிரிவு பாதுகாப்பைத் தொடர வேண்டிய அளவுக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என, மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது.மேலும், ஆதிஷிக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து டில்லி மாநகரப் போலீசிடம் இருந்து பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் கோரியது. மாநகரப் போலீசின் பாதுகாப்புப் பிரிவு அளித்த பரிந்துரையை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சகம், ஆதிஷி சிங்குக்கு வழங்கப்படும் இசட் பிரிவு பாதுகாப்பை ஒய் பிரிவாக மாற்ற உத்தரவிட்டுள்ளது.தற்போது, 'இசட் பிளஸ்' பாதுகாப்பில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பா ளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் பாதுகாப்பு நிலை அப்படியே தொடருகிறது.முதலில், கெஜ்ரிவால் மற்றும் ஆதிஷி ஆகிய இருவருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்த மாற்றங்களையும் செய்ய வேண்டாம் என, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருந்தது. பின்னர், ஆதிஷி சிங்கின் பாதுகாப்பை மட்டும் ஒய் பிரிவாக குறைக்க உத்தரவிட்டது.ஒய் பிரிவு பாதுகாப்பில் இரண்டு கமாண்டோக்கள் உட்பட 12 பேர் கொண்ட குழு ஆதிஷிக்கு பாதுகாப்பு வழங்கும். அவர் முதல்வராக இருந்த போது, அவரது வாகனத் தொடரணியில் வந்த பைலட் வாகனம் போன்ற சில சலுகைகள் நீக்கப்படும்.அதேபோல, சட்டசபைத் தேர்தல் முடிந்தவுடன் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., அஜய் தத் மற்றும் முன்னாள் சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் ஆகியோருக்கு வழங்கப்பட்டு இருந்த ஒய் பிரிவு பாதுகாப்பை திரும்பப் பெற, டில்லி மாநகரப் போலீஸ் மார்ச் மாதம் அளித்த பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டது.மத்திய உள்துறை அமைச்சக உத்தரவுப்படி, மத்திய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் அவ்வப்போது மதிப்பீட்டு ஆய்வு செய்து அறிக்கை வழங்கும். அதன் அடிப்படையில்தான் முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து முடிவு செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.டில்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளில் வென்று பா.ஜ., ஆட்சியைக் கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்த ஆம் ஆத்மி, 22 தொகுதிகளைக் கைப்பற்றி எதிர்க்கட்சி வரிசைக்குச் சென்றது.எதிர்கட்சி தலைவர் ஆதிஷிக்கு பாதுகாப்பு...இசட் பிரிவில் இருந்து ஒய் பிரிவுக்கு மாற்றி உத்தரவு
12-Apr-2025