ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு! வாக்காளர் அட்டை விவகாரத்தில்..
லோக்சபா தொகுதி மறுவரையறை மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் ஒரே பெயரில் வாக்காளர் அடையாள அட்டை வினியோகம் குறித்து விவாதிக்க சபை துணை தலைவர் மறுத்ததை அடுத்து ராஜ்யசபாவில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.ராஜ்யசபா நேற்று கூடியதும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு சட்டவிதி, 267ன் கீழ், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகளை சேர்ந்த, 10க்கும் அதிகமான எம்.பி.,க்கள் நோட்டீஸ் அளித்திருந்தனர்.திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் சுகேந்து சேகர் ராய், சுஷ்மிதா தேவ் மற்றம் காங்கிரஸ் கட்சியின் பிரமோத் திவாரி உள்ளிட்டோர், ஒரே பெயரில் பல்வேறு மாநிலங்களில் வினியோகிக்கப்பட்டுள்ள போலி வாக்காளர் அட்டை விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தினர்.தி.மு.க., சார்பில் எம்.பி.,க்கள் வில்சன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ.,வின் சிவதாசன் ஆகியோர் லோக்சபா தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க நோட்டீஸ் அளித்திருந்தனர்.ஆனால் அந்த நோட்டீசை ஏற்றுக் கொள்ள துணை தலைவர் ஹரிவன்ஷ் மறுத்துவிட்டார். இதையடுத்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர், சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.அதன் பின், பேசிய அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை, தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்றும், ஒதுக்கப்பட்ட நிதியை குறைக்காமல் பணிகளை விரைந்து நிறைவேற்றும்படி கோரிக்கை விடுத்தார்.
தமிழகத்தின் இரும்பு பயன்பாடு: மத்திய அரசு புதிய வாக்குறுதி
லோக்சபாவில் கேள்வி நேரத்தின்போது தென்சென்னை எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது:தமிழகத்தின் சிவகளையில் சமீபத்தில் கிடைத்த தொல் பொருள் கண்டுபிடிப்புகள், இந்தியாவின் இரும்பு யுகம் பற்றிய புரிதலில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. கங்கை சமவெளிகளின் இரும்பு உருக்குதலுக்கு முன்பே, கி.மு., 2172 க்கு முந்தையது இது என்று, அறிவியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. தமிழக முதல்வரும் இதனை அறிவியல் பூர்வமாக நிரூபித்து, அங்கு அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். மத்திய அரசும் அங்கீகரித்து, இதை உலக அளவில் கொண்டு செல்லுமா? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.அதற்கு பதில் அளித்த மத்திய கலாசார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ''தமிழகத்தின் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டிருக்கிறோம். இந்த கண்டுபிடிப்பு பற்றி, தமிழக முதல்வரும் சொல்லி இருந்தார். இதற்கான அறிவியல் பூர்வ ஆய்வுகள், இன்னும் நிலுவையில்தான் இருக்கின்றன. இதற்கான சான்றுகள் உறுதி செய்யப்பட்டதும், உலக அளவில் அதனை கொண்டு செல்வதற்கான முன்னெடுப்பு மேற்கொள்ளப்படும்,'' என்றார்.-நமது டில்லி நிருபர்-