நெல்லியாம்பதி பண்ணையில் ஆர்க்கிட் மலர் சாகுபடி
பாலக்காடு; நெல்லியாம்பதியில் உள்ள அரசுப் பண்ணையில், பலவிதமான ஆர்க்கிட் மலர்கள், கண் கவரும் வண்ணம் உள்ளன.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நெல்லியாம்பதி வன எல்லையோர பகுதியில், அரசின் கீழ் செயல்படும் ஆரஞ்சு மற்றும் காய்கறி பண்ணை உள்ளது. தற்போது இங்கு விரிவான ஆர்க்கிட் சாகுபடியும் செய்ய தொடங்கியுள்ளனர்.இதுகுறித்து, பண்ணை கண்காணிப்பாளர் சாஜித் அலி கூறியதாவது:பண்ணையில் உள்ள போளிஹவுஸில், வெளிநாட்டு ரகம் உட்பட ஆர்க்கிட் மலர் சாகுபடி செய்ய தொடங்கியுள்ளோம். கேரளாவின் காலநிலைக்கேற்ப வளரும் வீட்டின் உட்புறங்களில் அழகூட்டும் வகையிலான பல்வேறு ரக ஆர்க்கிட் மலர்களில் சிறப்பு கவனம் செலுத்தி சாகுபடி செய்து வருகிறோம்.இதற்கான சிறப்பு பானைகளில் பராமரிக்கிறோம். பூக்கள் பூப்பதும், அழகான இலைகள் கொண்ட ஆர்க்கிட் மலர்களை கயிறுகள் பயன்படுத்தி பரவ விட்டும் பராமரித்து வருகின்றோம்.சுற்றுலா பயணியர் ஆர்க்கிட் சாகுபடி குறித்து புரிந்து கொள்வதற்கும், பராமரிப்பு முறைகள் உட்பட உள்ளவை குறித்து விளக்கம் அளிப்பதற்கான வசதிகள் பண்ணையில் செய்துள்ளோம். டிவைன் வைன் மெச்சுவர், யு பின், சோகோ மொய்மி, டிங்கர் பெல்ஸ் கிஸ், ஈவ், ஹார்ட் பிரேக்கர், யாய மினி, சீசர், ஜம்போ வைட், டான்சிங் கேர்ள், பிராஸ்ட்டிய, ஜெய்ராக், வான்டா, சிபீடியம் என, 50க்கும் மேற்பட்ட ஆர்க்கிட் மலர்களை பராமரித்து வளர்க்கிறோம். இவை, விற்பனையும் செய்யப்படுகின்றன.இவ்வாறு, கூறினார்.