நெல் வைக்கோல் எரிப்பு பஞ்சாபில் 70% குறைந்தது
புதுடில்லி:'பஞ்சாப் மாநிலத்தில் பயிர்க் கழிவுகளை எரிப்பது 70 சதவீதம் குறைந்துள்ளது' என, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளது.என்.ஜி.டி., எனப்படும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள அறிக்கை: பஞ்சாப், உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் ஆண்டு தோறும் அக்டோபரில் இருந்து பயிர்க் கழிவுகளை எரிப்பதால், தலைநகர் டில்லியில் காற்று மாசு அபாய நிலைக்குச் செல்கிறது. இதையடுத்து, மூன்று மாநிலங்களிலும் விவசாயத் துறையிடம் அறிக்கை கேட்கப்பட்டது.வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் 26ம் தேதி தாக்கல் செய்த அறிக்கை: பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஆண்டு நவ., 25ல் 36,551 இடங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்பட்டன. அதுவே இந்த ஆண்டு நவ., 25ல் 10,479 ஆக குறைந்துள்ளது. இது, 70 சதவீதம் குறைவு.'இந்த ஆண்டு 19.52 மில்லியன் டன் பல்வேறு பயன்பாட்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கால்நடை தீவனத்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.பிற பயன்பாட்டுக்கு வைக்கோலை கொண்டு செல்ல பேலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பேலர் என்பது டிராக்டரில் பொருத்தப்பட்ட ஒரு கருவி. இந்தக் கருவி வைக்கோலை உருளை அல்லது செவ்வக பேல்களாக உருவாக்குகிறது. இந்த பேல்கள் வரிசையாக 'ரேக்' காக மாற்றப்படுகிறது.விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, 25ம் தேதி வரை 2,183 வைக்கோல் பேலர்கள் மற்றும் 2,039 ரேக்குகள் உருவாக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டுக்கான செயல் திட்டம் விரைவில் தயாரிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.