உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகளுக்கு பாக்., நேரடி நிதியுதவி அம்பலம்! சர்வதேச நிதி கண்காணிப்பு குழு அறிக்கை

பயங்கரவாதிகளுக்கு பாக்., நேரடி நிதியுதவி அம்பலம்! சர்வதேச நிதி கண்காணிப்பு குழு அறிக்கை

புதுடில்லி: பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஹவாலா, கிரிப்டோ என்.ஜி.ஓ.,க்கள், டிஜிட்டல் தளங்கள் வாயிலாக நிதி உதவி கிடைப்பதற்கு, அந்நாட்டு அரசே உதவுவதாக சர்வதேச நிதி கண்காணிப்பு குழு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு நிதி அளிப்பதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டி வரும் நிலையில், கடந்த 2022ம் ஆண்டு, 'கிரே லிஸ்ட்' எனப்படும் சாம்பல் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய நிதி அமைச்சகம் சார்பாக, 'எப்.ஏ.டி.எப்.,' எனப்படும் 'சர்வதேச நிதி கண்காணிப்பு குழு' என்ற அமைப்புக்கு மூன்று முறை கடிதம் அனுப்பப்பட்டது. இது, 'ஜி 7' கூட்டமைப்பு நாடுகளின் முயற்சியால் நிறுவப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பானது, சர்வதேச அளவில் பண மோசடி மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பதை கண்காணிக்கும். இந்நிலையில், பாகிஸ்தானில் லஷ்கர் -இ -தொய்பா, ஜெய்ஸ் -இ -முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஹவாலா, கிரிப்டோ, என்.ஜி.ஓ., எனப்படும் அரசு சாரா நிறுவனங்கள் போன்றவை வாயிலாக நிதியுதவி கிடைப்பதாக, எப்.ஏ.டி.எப்., தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் தெஹ்ரிக்- இ- - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலால் தடை செய்யப்பட்ட, லஷ்கர் -இ -தொய்பா, ஜெய்ஸ் -இ -முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் சட்ட விரோதமாக நிதி திரட்டுகின்றன. ஹவாலா, கிரிப்டோ, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக பணம் பெறப்படுகிறது. மேலும், 'ஜிகாத்' நிதியுதவியை, என்.ஜி.ஓ.,க்கள் வழியாக பெறுவதற்கு அந்நாட்டு அரசே உதவுகிறது. நிதி திரட்டுவதற்காக போலி நிறுவனங்கள், இயற்கை வளங்களை கடத்துதல், மிரட்டி பணம் பறித்தல், ஆயுத கடத்தல் என பல்வேறு வழிகளை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்துகின்றன. தெஹ்ரிக்- இ- தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு, பழங்குடி இனத்தவர் பகுதிகளை சுரண்டுகிறது. நெட்வொர்க் இல்லாத எல்லையோர பகுதி மற்றும் கிராமங்களுக்கு, ஹவாலா முறையில் பணம் செல்கிறது. காஷ்மீர் தொடர்பான பிரசாரம் மற்றும் நிதி திரட்டலுக்கு, அரசு உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றனர். தெற்காசியாவின் மற்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்த, ரகசிய பரிவர்த்தனை மற்றும் கிரிப்டோ கரன்சிகளை பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றனர். பயங்கரவாதிகளை பொறுத்துக் கொண்டு, அவர்களை ஆதரிக்கும் நாடுகள் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கிரே பட்டியலில் சேர்க்கப்படுமா?

சர்வதேச நிதி கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையானது, பயங்கரவாதத்தை தனது கொள்கையின் ஒரு பகுதியாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தீவிரமாக நிதியுதவி செய்யும் நாடாகவும் பாகிஸ்தானை அம்பலப்படுத்தி உள்ளது. இது, இந்தியாவின் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்ப்பதால், சர்வதேச அளவில், நம் நாடு, வலுவான கோரிக்கையை எழுப்பி, பாகிஸ்தானை கிரே பட்டியலில் சேர்க்குமாறு வலியுறுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கிரே நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானை சேர்த்தால், 'பயங்கரவாத நிதி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாத நாடு' என அறிவிக்கப்படும். சர்வதேச நிதியம், உலக வங்கி போன்ற அமைப்புகளிடம் இருந்து கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படும். கிரே பட்டியல் என்பது, சரியான நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட நாட்டை அறிவுறுத்தும் எச்சரிக்கை. அதை பொருட்படுத்தாமல், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால், மிகக் கடுமையான விதிகளைக் கொண்ட 'கருப்பு பட்டியலில்' பாகிஸ்தான் சேர்க்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சுந்தர்
ஜூலை 10, 2025 08:33

இப்பத்தான் கண்டுபிடிச்சாங்களா?


Subburamu Krishnasamy
ஜூலை 10, 2025 06:32

Terroristan is funded by Trump administration. The so called great power countries are encouraging terrorism in one way or other. They are indirectly supporting terrorism by aligning with countries ruled by undemocratic terrorist leaders.


Ganapathi Amir
ஜூலை 10, 2025 05:42

வல்லரசுகளின் கூலிப்படை நாடு.. அரசியல்வாதிகள் ரவுடிகளை கட்டுப்படுத்துவார்கள் என்று நம்புவது எவ்வளவு முட்டாள்தனமோ... அப்படித்தான் வல்லரசுகள் பாகிஸ்தானை கண்டிக்கும் என்று நம்புவதும்..


Kachada
ஜூலை 10, 2025 04:48

ஒப்பாரி கூட்டத்தை இன்னும் காணோம் ?


Kasimani Baskaran
ஜூலை 10, 2025 03:50

தீவிரவாதத்தால் வாழும் ஒரே நாடு பாகிஸ்தான். தீவிரவாதம் அங்கு குடிசைத்தொழில். அந்த நாட்டையே அது அழிக்கப்போகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை