| ADDED : செப் 17, 2025 06:07 AM
பாலக்காடு; பாலக்காடு பைபாஸ் ரயில் பாதைக்கு, 200 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயார் செய்துள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாலக்காடு கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: கேரள மாநிலம், சொரனூரில் இருந்து, பொள்ளாச்சி வழியாக தமிழகத்துக்கு வரும் ரயில்கள், பொதுவாக பாலக்காடு சந்திப்பு வந்து தான் செலலும் வேண்டும். அப்படி வரும் ரயில்களின் இன்ஜின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு இணைக்க வேண்டும். இப்பணிகளை செய்ய குறைந்தது முக்கால் மணி நேரமாகும். இதை தவிர்க்க பைபாஸ் ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. சொரனூரில் இருந்து, பொள்ளாச்சி வழியாக தமிழகத்துக்கு வரும் ரயில்கள், பாலக்காடு சந்திப்புக்குள் நுழையாமல், பாலக்காடு டவுன் ரயில்வே ஸ்டேஷன் வழியாக செல்லும் வகையில், பைபாஸ் வழித்தடம், 1.8 கி.மீ., அமைக்க, 200 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. பரளி பகுதியில் துவங்கி, கல்பாத்தி பாலத்தின் அருகே ரயில் வழித்தடத்தில் இணைகிறது இந்த பைபாஸ் வழித்தடம். இது விரைவில் ரயில்வே வாரியத்தின் அங்கீகாரத்துக்கு, தெற்கு ரயில்வே சார்பில் அனுப்பப்படும். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது, பாலக்காடு சந்திப்பில் நிலவும் ரயில் போக்குவரத்து நெரிச்சலுக்கு தீர்வு கிடைக்கும். மேலும், தமிழகத்துக்கு அதிகப்படியான ரயில் போக்குவரத்து வசதிகள் கிடைக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.