உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமான பாதுகாப்புக்கு குறைந்த நிதி; பார்லி., நிலைக்குழு அதிருப்தி

விமான பாதுகாப்புக்கு குறைந்த நிதி; பார்லி., நிலைக்குழு அதிருப்தி

புதுடில்லி : நடப்பு நிதியாண்டில், விமான பாதுகாப்பு உட்கட்டமைப்புக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டதற்கு, பார்லி., நிலைக்குழு அதிருப்தி தெரிவித்தது, தற்போது தெரிய வந்துள்ளது.குஜராத்தின் ஆமதாபாதில், கடந்த 12ல், 'ஏர் இந்தியா' விமானம் விபத்துக்கு உள்ளானதில், ஒரேயொரு பயணி தவிர, குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர். இது குறித்து, ஏ.ஏ.ஐ.பி., எனப்படும் விமான விபத்து புலனாய்வு பணியகம் விசாரித்து வருகிறது.

அதிருப்தி

இந்நிலையில், நடப்பு 2025 - 26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், விமான பாதுகாப்பு உட்கட்டமைப்பு மற்றும் விபத்து விசாரணை திறன்களுக்கு, வெறும் 35 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டதற்கு, பார்லி., நிலைக்குழு அதிருப்தி தெரிவித்தது, தற்போது தெரிய வந்துள்ளது. சுற்றுலா, போக்குவரத்து மற்றும் கலாசாரத் துறை தொடர்பான பார்லி., நிலைக்குழு, கடந்த மார்ச் 25ல், ராஜ்யசபாவில் அறிக்கை தாக்கல் செய்தது. அதன் விபரம்:உலகளவில், மூன்றாவது பெரிய விமான சந்தையாக நம் நாடு உள்ளது. 2014ல், 74 ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை தற்போது 150 ஆக உயர்ந்துள்ளது. மேலும், விமான பயணியரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எனினும், விமான பாதுகாப்பு உட்கட்டமைப்பு மற்றும் விபத்து விசாரணை திறன்களுக்கு, 2025 - 26ம் நிதியாண்டில், வெறும் 35 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. டி.ஜி.சி.ஏ., எனப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்துக்கு, 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், விமான விபத்துகளை விசாரிக்கும் புலனாய்வு அமைப்பான ஏ.ஏ.ஐ.பி.,க்கு, 20 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.

மதிப்பாய்வு

பி.சி.ஏ.எஸ்., எனப்படும் சிவில் விமான பாதுகாப்பு பணியகத்துக்கு, 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. விமான நிலையங்கள் மற்றும் பயணியர் பாதுகாப்பில், ஏ.ஏ.ஐ.பி., - பி.சி.ஏ.எஸ்., பங்கு அளப்பரியது. இந்த அமைப்புகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.பாதுகாப்பு உட்கட்டமைப்பை வலுப்படுத்தவும், புலனாய்வு திறன்களை மேம்படுத்தவும் இந்த அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதா என்பதை மதிப்பிடுவது அவசியம். மேலும், ஏ.ஏ.ஐ.பி., - பி.சி.ஏ.எஸ்., அமைப்புகளில் ஊழியர்களின் எண்ணிக்கையையும் மதிப்பாய்வு செய்ய வேண்டும். டி.ஜி.சி.ஏ.,வுக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் போது, ஏ.ஏ.ஐ.பி., - பி.சி.ஏ.எஸ்., அமைப்புகளுக்கு குறைந்த நிதி வழங்கப்படுவது ஏற்புடையதல்ல. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைத்தது 'ஏர் இந்தியா'

கடந்த வாரம் ஆமதாபாதில் ஏர் இந்தியாவின் 787 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, பல்வேறு உள்நாடு மற்றும் வெளிநாடு பயணங்களுக்கான டிக்கெட் விலையை அந்நிறுவனம் குறைத்துள்ளது. குறிப்பாக போயிங் 787 ரக விமானங்களின் டிக்கெட் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் விமான டிக்கெட் விலை எப்போதுமே அதிகமாக இருக்கும். ஆனால், விபத்துக்கு பின், ஏர் இந்தியாவில் இவ்வாறு முன்பதிவு செய்யும் டிக்கெட் விலை குறைந்துள்ளது. உதாரணமாக, டில்லியிலிருந்து மலேஷியாவின் கோலாலம்பூர் செல்லும் விமான டிக்கெட் விலை 16 சதவீதம் சரிந்து 11,389 ரூபாயாக குறைந்துள்ளது. துபாய் - சிட்னி டிக்கெட் விலை 5 சதவீதமும்; மெல்போர்ன் டிக்கெட் விலை 2 சதவீதமும் குறைந்துள்ளது. உள்நாட்டிலும் பல்வேறு பயண வழித்தடங்களில் விலை குறைந்துள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு - ஹைதராபாத் பயணக் கட்டணம் 24 சதவீதம் சரிந்து, 3,314 ரூபாயாக குறைந்துள்ளது. அதே போல பெங்களூரு - புனே; பெங்களூரு - சென்னை; டில்லி - ஆமதாபாத்; டில்லி - சென்னை வழித்தடங்களில் டிக்கெட் விலை 20 சதவீதத்துக்கும் மேலாக குறைந்துள்ளது. மேலும், நெதர்லாந்து, ஜெர்மனி, ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமானக் கட்டணமும் கணிசமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் லண்டன் செல்வதற்கான விமான டிக்கெட் விலை அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Arul Narayanan
ஜூன் 21, 2025 21:11

விமான நிறுவனங்கள் தனியார் வசம் சென்ற பிறகு வேண்டிய அளவு நிதியை அவர்களிடமிருந்து வசூல் செய்ய வேண்டியது தானே.


Kasimani Baskaran
ஜூன் 21, 2025 07:17

விசாரணைக்கு அதிக பணம் செலவு செய்வதும் அதே சமயம் போதிய நிதியை பராமரிப்புக்கு ஒதுக்குவதும் மிக அவசியம். நிலைக்குழு எட்டாக்கனி பற்றி ஆய்வு செய்வதை விட்டுவிட்டு விபத்து நடந்தவுடன் விசாரிக்க செலவு செய்வதற்கு பெரிய கட்டுப்பாடுகள் இருப்பது போல உருட்டுவது அதுவே ஒரு நிலையற்ற குழு என்பதை காட்டுகிறது.


அப்பாவி
ஜூன் 21, 2025 05:27

ஃபாரின் சி.இ.ஓ க்களுக்கு சம்பளம் குடுக்கறதுக்கே பராமரிப்பு செலவு குறைக்கப் பட்டிருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை