கட்டண உயர்வால் சில்லரை பிரச்னை நடத்துனருடன் பயணியர் தகராறு
பெங்களூரு,: பஸ் டிக்கெட் கட்டண உயர்வால், சில்லரை பிரச்னை துவங்கியுள்ளது. பி.எம்.டி.சி., நடத்துனர்கள், பயணியர் இடையே வாக்குவாதம் நடக்கிறது.பி.எம்.டி.சி.,யில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பின், பஸ் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது. வெவ்வேறு ஸ்டேஜ்களில் 1 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. திடீர் கட்டண உயர்வு குறித்து, பயணியருக்கு தகவல் தெரியாததால், பழைய கட்டண தொகையை கொடுத்து டிக்கெட் கேட்டனர். நடத்துனர் கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து விவரித்து, அதற்கான தொகையை பெற்று, டிக்கெட் கொடுத்தார்.சிலர் கூடுதல் தொகை கொடுக்க மறுத்து, நடத்துனருடன் வாக்குவாதம் செய்த சம்பவங்களும் ஆங்காங்கே நடந்துள்ளன. இதற்கிடையே சில்லரை பிரச்னையும், நடத்துனர்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது.இதற்கு முன் கட்டணம் உயர்த்தப்பட்ட போது, சில்லரை பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில், டிக்கெட் கட்டணத்தை ரவுண்ட் அப் செய்து, முதல் ஸ்டேஜுக்கு ஐந்து ரூபாய், இரண்டாவது ஸ்டேஜுக்கு, 10 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.இப்போது 5 ரூபாய் டிக்கெட் ஆறு ரூபாயாகவும், 10 ரூபாய் டிக்கெட் 12 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது போன்று கட்டணம் நிர்ணயித்ததால், சில்லரை கொடுக்க முடியாமல், நடத்துனர்கள் திண்டாடுகின்றனர். சில பயணியர் நடத்துனரின் சூழ்நிலையை புரிந்து கொள்கின்றனர். சிலர் சில்லரையை கொடுத்தே ஆக வேண்டும் என, சண்டைக்கு நிற்கின்றனர். சில நடத்துனர்கள் கியுஆர் கோட் ஸ்கேன் செய்து, டிக்கெட் கட்டணம் செலுத்தும்படி கூறுகின்றனர். ஸ்மார்ட் போன் வைத்துள்ளோர், யு.பி.ஐ., செயலி பயன்படுத்துவோர் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தி, டிக்கெட் பெறுகின்றனர். ஸ்மார்ட் போன் இல்லாதோர் பிரச்னைக்கு ஆளாகின்றனர். சரியான சில்லரை வைத்து கொண்டு பயணிக்கும்படி, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, பயணியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.