இண்டிகோ நிறுவன இணையதளம் முடங்கியதால் பயணியர் அவதி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மும்பை: 'இண்டிகோ' விமான நிறுவனத்தின் இணையதளம் தற்காலிகமாக நேற்று முடங்கியதால், அந்த நிறுவனத்தின் விமானத்தில் பயணிக்க இருந்த பயணியர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.தனியார் விமான நிறுவனமான இண்டிகோ, நம் நாட்டில் 2,000க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களை இயக்குகிறது. இந்நிலையில், இண்டிகோவின் கணினி சர்வரில் நேற்று கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த நிறுவனத்தின் இணையதளம் முடங்கியது. வார இறுதிநாள் என்பதால் வழக்கத்தை விட அதிக பயணியர் இருந்தனர். அவர்கள் அனைவரும், 'செக் -- இன்' கவுன்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து விமானத்தில் ஏற வேண்டி இருந்தது.இண்டிகோ விமானங்களில் பயணிக்க வேண்டியவர்கள், 'போர்டிங் பாஸ்' மற்றும் 'வெப் செக் - இன்' செய்ய முடியாமல் தவித்தனர். பெங்களூரு விமான நிலையத்தின் இண்டிகோ கவுன்டர்களில் கூட்டம் அலைமோதியது. அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த பயணி ஒருவர், 'இது, பெங்களூரு ரயில் நிலையமா, விமான நிலையமா' என, கேள்வி எழுப்பி உள்ளார்.இதே போல், மும்பை விமான நிலையத்திலும் காலதாமதம் காரணமாக இண்டிகோ நிறுவன ஊழியர்களுடன் பயணியர் சண்டை போட்டனர். இதையடுத்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 'தற்காலிக தொழில்நுட்ப கோளாறே இத்தகைய சிரமத்திற்கு காரணம்; அது, சில மணி நேரங்களில் சீரடைந்தது' என தெரிவித்தது.சென்னை விமான நிலையத்திலும், 10க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்களின் புறப்பாடுகளில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.